மழையில்லாததால் கருகும் வாழப்பாடி வனப் பகுதிகள்: வன விலங்குகள், பறவைகள் பரிதவிப்பு
வாழப்பாடி வனப் பகுதியில் தாவரங்களின் இலைகள் உதிர்ந்து துளிர்விட்டு தழைக்கும் தருணத்தில் மழையில்லாததால்,


வாழப்பாடி வனப் பகுதியில் தாவரங்களின் இலைகள் உதிர்ந்து துளிர்விட்டு தழைக்கும் தருணத்தில் மழையில்லாததால், பசுமையாக கண்களுக்கு விருந்தளித்த வனப் பகுதிகள் காய்ந்து கருகிப் போயின. அதனால், தண்ணீர், தீவனத்துக்கு வழியின்றி வனவிலங்குகளும், பறவைகளும் பரிதவித்து வருகின்றன.
சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சுற்றி, கோதுமலை, வெள்ளாளகுண்டம் மலை, திருமனூர் ஜம்பூத்து மலை, கிட மலை, நெய்ய மலை, அருநூற்று மலை,
மன்னூர் மலை, சந்து மலை, பெலாப்பாடி மலை உள்ளிட்ட பல்வேறு வனப் பகுதிகள் காணப்படுகின்றன.
ஒருங்கிணைந்து பரந்து காணப்படாமல் ஆங்காங்கே பரவலாகக் குறுகிக் காணப்படுவதால், வாழப்பாடி வனப் பகுதிகளில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற ஊன் உண்ணும் விலங்குகளும், யானைகளும் இல்லை. பல்வேறு இனக் குரங்குகள், மான்கள், கரடி, காட்டுப் பன்றி, முள்ளம்பன்றி, காட்டெருமை, காட்டாடு, நரி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்களும், மயில், கழுகு போன்ற பறவைகளுமே நிறைந்துள்ளன.
பெரும்பாலும் தாவர உண்ணிகளே வாழ்ந்து வருவதால், தீவனம் மற்றும் தண்ணீருக்கு வனத்தையே சார்ந்துள்ளன. வனப் பகுதியில் புதர்மண்டி கிடக்கும் மரம், செடி, கொடிகளும், தற்போது இலையுதிர்ந்து காணப்படுகின்றன. தாவரங்கள் துளிர்விட்டு தழைக்கும் தருணத்தில் மழைப் பொழிவு இல்லாததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமையாக கண்களுக்கு விருந்தளித்த வனப் பகுதிகள், தற்போது காய்ந்து கருகி கிடக்கின்றன.
வனப் பகுதியிலுள்ள நீரோடை, குட்டை, சுனை, பாலி உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டு கிடக்கின்றன. அதனால், போதிய தண்ணீர், தீவனத்துக்கு வழியின்றி, வன விலங்குகளும், பறவைகளும் பரிதவித்து வருகின்றன. தொடர்ந்து வறட்சி நீடித்தால் தண்ணீர் மற்றும் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களுக்குள் புகும் நிலை ஏற்படுமென்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி, கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதையும், குழிகள், கிணறுகளில் விழுந்து பலியாவதையும் தடுக்க, வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், தண்ணீர் தொட்டிகளை வைக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வனத்தையொட்டிய கிராம மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து வாழப்பாடியை அடுத்த கோதுமலை வனப் பகுதி அருகிலுள்ள மாரியம்மன்புதுôர் கிராம வனக் குழுத் தலைவர் ஆர்.முருகன் கூறுகையில், வனப் பகுதியில் இலையுதிர்ந்த மரங்கள், செடிகள், கொடிகளும், மழையில்லாததால் துளிர்விட வழியின்றி காய்ந்து கிடக்கின்றன. வன விலங்குகள் கிராமத்துக்குள் புகுவதைத் தடுக்க, வனத் துறை தண்ணீர் தொட்டிகளை வைக்க வேண்டும். தீப்பிடிக்கும் பொருள்களை வனப் பகுதிக்குள் எடுத்து செல்வோரைக் கண்காணித்துத் தடுத்து, காட்டுத் தீ ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...