சேலம் மாவட்டம், கல்வராயன் மலை கிராமங்களில் வசித்துவரும் மலைவாழ் பழங்குடியின மக்கள், இளம் வயதில் கணவரை இழந்த விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை வழிவழியாக ஆதரித்து வருகின்றனர். உறவுகள் கூடி மறுமணம் செய்து வைப்பதை மரபாகத் தொடர்ந்து வருகின்றனர்.
கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள கல்வராயன் மலைத் தொடர், சேலம், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களை இணைக்கும் வகையில் 100 கி.மீ. தொலைவில் பரந்து காணப்படுகிறது. இந்த மலைத் தொடரில் சின்னகல்வராயன், பெரிய கல்வராயன் மற்றும் அருநூற்றுமலை, நெய்யமலைகளின் மேற்பகுதியில், மூன்று மாவட்ட எல்லைகளிலும் 100-க்கும் அதிகமான மலை கிராமங்கள் உள்ளன.
அந்த கிராமங்களில் ஏறக்குறைய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பூர்வகுடிகளான மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பெயர்ந்து வந்த மக்கள், கல்வராயன் மலை கிராமங்களில் குடியேறியதாகவும் வரலாற்று அறிஞர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான கல்வராயன் மலை கிராமங்கள் மற்றும் அருநூற்றுமலை, நெய்யமலை கிராமங்களில் ஒரே மாதிரியான கோயில் திருவிழா, திருமணம், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட சம்பிரதாயங்களையே மக்கள் பின்பற்றி வருகின்றனர். பெரும்பாலும், உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர். இளம் வயதில் கணவரை இழந்த விதவைகளுக்கு உறவுகள் கூடி மறுமணம் செய்து வைப்பதையும் மரபாகத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
திருமணமான ஆண் ஒருவர் இறந்துவிட்டால், அவருக்கான இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததும், கணவரை இழந்த விதவைப் பெண்ணை அழைத்து, அவரது விருப்பத்தைக் கேட்கும் உறவினர்கள், அவர் மறுமணம் செய்து கொள்ள விரும்பினால், அவரை மணந்து கொள்ள விரும்பும் உறவினருக்கு, "கண்ணியார்' என அழைக்கப்படும் அந்தக் கிராம சமூக தலைவரின் முன்னிலையில் மறுமணம் செய்து வைக்கின்றனர். நாகரீகம் தொற்றிக் கொண்ட நகர்ப் புறங்களிலும் கூட, விதவைகள் மறுமணத்துக்கு முழுமையான ஆதரவு கிடைக்காத நிலையில், மலை கிராமங்களில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள், முன்னோர் வழியாக மறுமணத்தை ஆதரிப்பதோடு, உறவுகள் கூடி திருமணம் செய்துவைப்பது போற்றிப் புகழ வேண்டிய சமூக மாற்றத்துக்கான அச்சாரமாக விளங்கி
வருகிறது.
இதுகுறித்து கல்வராயன் மலை குன்னூர் கிராமத்தின் சமூகத் தலைவர்களில் ஒருவரான கண்ணியான் என்கிற ராமசாமி கூறியதாவது:
"கல்வராயன் மலை கிராமங்களில் வசித்துவரும் பழங்குடியின மக்கள், பெரும்பாலும் தங்களது உறவுகளுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கின்றனர். இளம்வயதில் கணவரை இழக்க நேரிடும் விதவைகளுக்கு, அதே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமணம் செய்து வைப்பதை மரபாகத் தொடர்ந்து வருகிறோம். ஆனால், மறுமணம் செய்து கொள்ள வேண்டுமென்பது கட்டாயமல்ல.
மறுமணம் செய்து வைப்பதால், அந்தப் பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் பாதுகாப்பும், ஆதரவும் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, சொத்து தகராறும் குறைகிறது. விதவைப் பெண் மறுமணம் செய்து கொள்ளாமல் கைம்பெண்ணாக இருப்பது, அந்தக் குடும்பத்துக்கும், கிராமத்துக்கும் தீங்கு ஏற்படுத்தும் என்ற சம்பிரதாயம், மக்களிடையே நிலவி வருவதும் விதவை மறுமணத்துக்கு ஒரு காரணமாகும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.