சேலம் மாவட்டத்தில் பசுமை சாலை திட்டத்தைக் கைவிடக் கோரி, கிராம சபைக் கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
சேலம்-சென்னை பசுமை சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தனர்.
அந்த வகையில், சேலம் பாரப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பசுமை சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றக் கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற பனமரத்துப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அதிகாரிகள் வெளியேறினர். அங்கிருந்து காரில் கிளம்ப முயன்ற போது, கார் முன் மக்கள் அமர்ந்து அவர்களைச் செல்லவிடாமல் சிறை பிடித்தனர். இதையடுத்து, மீண்டும் வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த எதிர்ப்புக்குப் பிறகு பாரப்பட்டி கிராம சபைக் கூட்டத்தில் பசுமை சாலை திட்டத்தை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பூலாவரி, நாழிக்கல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தைப் புறக்கணித்து கலைந்து சென்றனர்.
மாவட்டத்தில் குப்பனூர், குள்ளம்பட்டி, பாரப்பட்டி, மின்னாம்பள்ளி, ஆச்சாங்குட்டப்பட்டி, பூலாவரி, சின்னகவுண்டபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, பசுமை சாலை திட்டத்தை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.