வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சேலத்தில் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
சேலம் கோட்டை பகுதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான அழகிரி நாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக
நடைபெற்றது.
அதிகாலை முதலே அழகிரிநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகம், தீப ஆராதனைகள் நடத்தப்பட்டு, வேத பாராயணம் வாசிக்கப்பட்டு கோயிலின் உள்புறம் சுவாமி வலம் வந்தார்.
பின்னர் அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டபோது, அந்த வழியாக அழகிரிநாதர் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி உடன் பல்லக்கில் வெளியேறி நம்மாழ்வாருடன் கோயிலைச் சுற்றி வலம் வந்தார். அப்போது அங்கு குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா எனக் கூறி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் கண்டு தரிசனம் செய்தனர்.
சேலம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டனர்.சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியைக் காண முன்தினம் இரவு 8 மணி முதல் ஏராளமான பக்தர்கள் கோயில் முன் காத்திருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி பெருமாளைத் தரிசிக்க அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டது.
மேலும் வரிசையில் சென்று சாமியைத் தரிசிக்க மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமில்லாமல் அசம்பாவிதங்களைத் தடுக்கவும், குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பணியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
கோயிலைச் சுற்றியும் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டதாக, கோயில் செயல் அலுவலர் குமரவேல் தெரிவித்தார். பொதுமக்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோட்டை பெருமாளைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கோயிலுக்கு வந்தனர்.
ஓமலூரில்....
ஓமலூரை அடுத்துள்ள சின்னதிருப்பதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து சரியாக 5 மணிக்கு வடக்குப்புற வாசலான சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சி தந்தார்.
பின்னர் பெருமாள் கோயிலைச் சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதேபோன்று ஓமலூர் விஜயராகவ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் லட்சுமண பெருமாள் ஆகியோருடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதுபோல ஓமலூர் அருகே விஜயராகவ பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டியிலுள்ள ஸ்ரீஉக்ர கதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
மூலவர் தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஆண்டாள், யோக நரசிம்மர், கிருஷ்ணர், ராமர் சன்னிதி, அஷ்டலட்சுமி, ஹயக்கீரிவர், தன்வந்திரி ஆகிய சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இதேபோல் தம்மம்பட்டி பெருமாள் மலையிலுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
சங்ககிரியில்...
சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ வஸந்தவல்லி உடனமர் ஸ்ரீ வஸந்தவல்லப ராஜப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.
மூலவருக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு உற்சவ மூர்த்தி சுவாமி கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக வெளியே வந்தார்.
பின்னர் சுவாமி கோயில் வெளிபிரகாரத்தில் வலம் வந்து ஆலயத்தை அடைந்தார்.
வடுகப்பட்டியில்...
சங்ககிரி அருகே வடுகப்பட்டி அருள்மிகு சென்றாய பெருமாள் கோயிலில் சுவாமிக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோயிலின் முன் உள்ள திருக்கோடி தூணில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டன.
எடப்பாடியில்...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எடப்பாடி மூக்கரை நரசிம்மப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு யாக பூஜையைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்டர் புஷ்ப பல்லாக்கில் உற்சவ மூர்த்தி சொர்க்கவாசல் வழியாக வெளிவந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிந்தா என்று சரணக் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் முகப்பில் உள்ள பல்லி வடிவத்தை பக்தர்கள் மலர்த் தூவி வணங்கினர். வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, சன்னிதான கருவறையில் சயன கோலத்தில் காட்சியளித்த மூலவரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம்
வழக்கப்பட்டது.
இதுபோல சுற்றுவட்டாரப் பகுதிகளான ஏரி சாலை சென்றாயப் பெருமாள் கோயில், வெள்ளக்கரடு திம்மராயப் பெருமாள் கோயில், தேவண்ணக் கவுண்டனூரில் உள்ள வெள்ளூற்றுப் பெருமாள் சன்னிதானம் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு
விமரிசையாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகர் கவின் படத்தில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷாலினி!

சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது!

மன்னிப்பு கேட்டு பேச்சைத் தொடங்கிய முதல்வர் விஜய்!

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை!
விடியோக்கள்

பயிர்க்கடன்: முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு! | TN Assembly | TVK


