புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான கண்காட்சித் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்த வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி மாணவரை ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், மத்திய அரசு நிதியுதவியுடன் அறிவியலில் ஆய்வு மனப்பான்மையை பள்ளி மாணவர்களுக்கு வளர்க்கும் வகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதை வழங்கி வருகிறது.
இதற்காக சேலம் மேட்டுப்பட்டியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 59 பள்ளிகளிலிருந்து 144 மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளைக் காட்சிக்கு வைத்தனர்.
அதில் வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளியைச் சேர்ந்த தசானந்தா (6-ம் வகுப்பு), நவநீதன் (7-ம் வகுப்பு), சுபாஷித் (8-ம் வகுப்பு) ஆகியோர் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் மாணவர் சுபாஷித்தின் அறிவியல் படைப்பு மாவட்டத்திலேயே மூன்றாவது சிறந்த படைப்பாகத் தேர்வானது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோர் மாணவர் சுபாஷித்துக்குப் பரிசு, கேடயம், பாராட்டுச் சான்றிதழை வழங்கிப் பாராட்டினர்.
பள்ளியின் தலைவர் அருள்குமார், செயலாளர் தங்கவேல், பொருளாளர் முத்தம்மாள், கல்விக் குழு ஆலோசகர்கள், பள்ளி இயக்குநர்கள், முதல்வர் செல்வராஜன் ஆகியோர் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.