வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11, 12-ஆம் வகுப்பில் ஆங்கில வழி கல்வி தொடங்க வேண்டுமென, பொதுமக்கள், பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவியர் பயின்று வருகின்றனர்.
சுற்றுப்புற பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 5-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் பயின்ற மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில், வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆங்கில வழி மாணவியர், அதிக விழுக்காடு தேர்ச்சி, மதிப்பெண்களும் பெற்று வருகின்றனர். ஆனால், 11,12-ஆம் வகுப்பில் தமிழ் வழியில் மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால், சேலம், ஆத்தூரில் இயங்கும் அரசு பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
எனவே, வாழப்பாடி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் கமல்ராஜா கூறியதாவது:
வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எதிர்வரும் 2018-19-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பிலும், அடுத்தாண்டில் இருந்து 12-ஆம் வகுப்பிலும் ஆங்கில வழி கல்வியை தொடங்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் வாழப்பாடி நகர வளர்ச்சிக்குழு சார்பில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.