எல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

மேட்டூர் காவிரி ஆற்றில் மூழ்கி 5 பேர் சாவு

மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தம்பதி உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 9:32 am IST

மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தம்பதி உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம்,  விஜயமங்கலத்தைச் சேர்ந்தவர் சரவணன்(35).  நெசவுத் தொழிலாளி.  இவர் தனது குடும்பத்தினருடன் மேட்டூர் அருகே உள்ள ரெட்டியூரில் வசித்துவரும் உறவினர் கோபால் என்பவரின் வீட்டுக்கு சனிக்கிழமை வந்துள்ளார்.  இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சரவணன் (35),  அவரது மனைவி மைதிலி(32),  மகன் ஹரிஹரன்(9),  மைதிலியின் தங்கை மகள் ரவினா (15),  கோபாலின் மகள்கள் பொறியியல் படிக்கும் மாணவிகள் தனுஸ்ரீ(18),   வாணிஸ்ரீ (20) ஆகிய 6 பேரும் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். இதில் ஹரிஹரன் குளிப்பதற்காக ஆற்றில்  இறங்கியபோது,  அவரை தண்ணீர் இழுத்துச் சென்றது.  அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர்.  இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் திரண்டு வந்து காப்பாற்ற முயன்றனர்.  இதில் தனுஸ்ரீ மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார்.  மற்றவர்கள் 5 பேரும் நீரில் மூழ்கினர்.  
     இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டூர் தீயணைப்புப் படையினர், மேட்டூர் அனல் மின்நிலைய தீயணைப்புப் படையினர் மற்றும் மீனவர்கள் பரிசல்கள் மூலம் பல மணி நேரம் ஆற்றில் தேடினர்.  இதில் சரவணன்,  மைதிலி,  ரவினா,  வாணிஸ்ரீ ஆகியோரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டன.   ஹரிஹரன் சடலம் மாலை வரையும் தேடியும் கிடைக்காத காரணத்தால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.  திங்கள்கிழமை மீண்டும் தேடும் பணி தொடரும் என்று போலீஸார் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் குறித்து மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார்.  மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தேடும் பணியை முடுக்கிவிட்டனர்.  இதையடுத்து,  மாவட்ட  ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:   வருவாய்த் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதனை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரியில் நீராட வந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.  பொதுமக்கள் எச்சரிக்கையை அலட்சியப்படுத்தக் கூடாது.  மேட்டூர் அணை நாளை நிரம்ப இருப்பதால், அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆற்றில்  வெள்ளம் ஏற்படும் என்பதால், 12 காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்என்றார்.

அன்புமணி இரங்கல்
காவிரி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  மேட்டூர் ரெட்டியூரில் காவிரியில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.   உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.