பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி, அரசியல் இயக்கத்தை தொடங்கியிருக்கும் கே. அண்ணாமலையின் அடுத்த கட்ட நகர்வைத் தமிழ்நாடு உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, 2019 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்று பாஜகவில் இணைந்தார். ஜூலை 2021-ல் தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றார்.
திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு, ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணம் என தமிழ்நாட்டு மக்களிடையே அண்ணாமலை நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இதன் மூலம், பாஜகவின் பக்கம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரும்பினார்கள் என்றால் மறுக்க இயலாது.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆதரவின்றி, பாஜகவை வளர்க்கப் போவதாக அண்ணாமலை பல்வேறு உத்திகளைக் கையாண்டார். இதன் விளைவாக 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி முறிந்தது. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட நிலையில், 11.24 சதவிகித வாக்குகளை பாஜக பெற்றது. 2019 தேர்தலைவிட 3.58 சதவிகிதம் கூடுதல் வாக்குகளாகும்.
ஆனால், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மீண்டும் அதிமுகவுடன் பாஜக மேலிடம் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தையைத் தொடங்கிய நிலையில், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை விலகினார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகியான நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் மாநிலத் தலைவராக நியமித்தது.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவதற்காகக் கேட்கப்பட்ட தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படாததால் அவர் போட்டியிடவில்லை என்றும் அவருடைய ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்டோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்தவுடன் பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகப் போவதாக தகவல் பரவிய நிலையில், ஜூன் முதல் வாரம் தில்லி பயணம் மேற்கொண்ட அவர், பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
அவர்களிடம் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்ததற்கான காரணங்களை அறிக்கையாக சமர்ப்பித்தார் (அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்தலைச் சந்தித்த பாஜக, உதகை தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வெறும், 2.97 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. 2021-ல் 4 தொகுதிகளில் வெற்றியும், 2.62 சதவிகித வாக்குகளையும் பாஜக பெற்றது).
தொடர்ந்து, ஜூன் 5 ஆம் தேதி காலை பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அன்று பகல் 12 மணிக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக நேரலையில் தொண்டர்களுடன் பேசிய அண்ணாமலை, இது நம்ம இயக்கம் (We the leader) என்ற அமைப்பை தொடங்குவதாகவும், 2029 மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சியாகப் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார்.
மேலும், இது நம்ம இயக்கத்தில் இணையலாம் எனத் தெரிவித்த அண்ணாமலை, உறுப்பினர் சேர்க்கைக்கான தளத்தையும் அறிமுகம் செய்தார். முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் அண்ணாமலை இயக்கத்தில் இணைந்தனர்.
தற்போதைய (ஜூன் 23, மாலை 4 மணி) நிலவரப்படி, 18.51 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.
எதிர்ப்பும் ஆதரவும்
அண்ணாமலை தொடங்கியிருக்கும் இது நம்ம இயக்கத்தை பாஜகவின் மற்றொரு முயற்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவெக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன.
மேலும், அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எவ்வித பாதிப்பமில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், அண்ணாமலை சென்ற பிறகுதான் கட்சி முழு பலத்துடன் இருப்பதாக மூத்த நிர்வாகி தமிழிசை செளந்தரராஜனும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன், பாஜக இளைஞர் - விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இது நம்ம இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளனர்.
மேலும், பாஜகவின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தொடங்கி, அடிநிலைத் தொண்டர்கள் வரை பரவலாக பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலை இயக்கத்தில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அடுத்து என்ன செய்யப் போகிறார்?
50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்து வந்த நிலையில், தமிழ்நாட்டின் மக்கள் இந்தத் தேர்தலில் தவெகவை வெற்றியடையச் செய்து மூன்றாவதாக ஒரு பெரிய கட்சியை உருவாக்கியுள்ளார்கள்.
திமுக Vs அதிமுக என்ற அரசியல் களம், தேர்தல் பிரசாரங்களில் முதல்வர் விஜய் சொன்னதைப் போல, தவெக Vs திமுக என மாறியிருக்கும் நிலையில், வருங்காலத்தை விஜய் Vs அண்ணாமலை என மாற்றத் திட்டமிட்டுக் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் சில அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தான் தொடங்கும் அரசியல் கட்சியை தவெகவுக்கு மாற்றாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக, தவெகவில் இருக்கும் குறைகளைத் தனது கட்சியின் நிறைகளாக மாற்றும் முயற்சியில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தற்போதைய தவெக அரசில் எம்.எல்.ஏ.க்களாகவும், அமைச்சர்களாகவும் இருக்கும் பலருக்கு இன்னமும் அரசியல் புரிபடவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த நிலையில், அரசியல் கட்சியாக மாறவிருக்கும் ’இது நம்ம இயக்கம்’ சார்பில் உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை யார் போட்டியிட வேண்டுமென்றாலும், அவர்கள் அரசியல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.
இதற்காக, கோவையில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அரசியல் பயிற்சி மையத்தை அண்ணாமலை தொடங்கியுள்ளார். அவரது கட்சியில் இணைபவர்கள் இந்த மையத்தில் பயிற்சி பெறுவதைக் கட்டாயமாக்கியுள்ளார்.
வருகின்ற ஜூலை மாதம் முதல் தனது அரசியல் இயக்க உறுப்பினர்களுக்கு பயிற்சியைத் தொடங்கவுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நீண்ட காலமாகத் தமிழ்நாடு எதிர்த்து வரும் மும்மொழிக் கொள்கை, நீட் தேர்வு போன்ற மத்திய பாஜக அரசின் திட்டங்களுக்கு எதிராகவும் அண்ணாமலை கருத்து தெரிவித்து வருகிறார்.
ஆனால், நாள்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து, மக்கள் பிரச்னைகளை எடுத்துரைப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பின்தொடர்பாளர்களை பெற்ற அண்ணாமலை, ஏனோ சமீபகாலமாக செய்தியாளர்கள் சந்திப்பைக் குறைத்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி ’இது நம்ம இயக்க’த்தை அரசியல் கட்சியாக மாற்றும் அறிவிப்பை அண்ணாமலை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், 50 லட்சம் உறுப்பினர்களை எட்டிய பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இவ்வியக்கத்தில் முதல் 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தாலும், அடுத்த 17 நாள்களில் ஐந்தரை லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், 50 லட்சம் என்ற எண்ணிக்கையை அண்ணாமலை எப்போது எட்டப் போகிறார்? எட்டிய பிறகுதான் அரசியல் அறிவிப்பா? ஆனாலும் பரவாயில்லை என அறிவித்து விடுவாரா? அண்ணாமலையின் அடுத்த கட்ட நகர்வுதான் என்ன? காத்திருக்கிறார்கள் தமிழ்நாடு மக்கள்.
Summary
What is Annamalai going to do next?
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலையின் இது நம்ம இயக்கம்! 8 லட்சத்தைக் கடந்த உறுப்பினர் எண்ணிக்கை!
புதிய அரசியல் இயக்கம் தொடங்கினாா் அண்ணாமலை! அடுத்த தோ்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு
இன்றுமுதல் புதிய இயக்கம்; வரும் தேர்தலில் போட்டி! அண்ணாமலை

தமிழ்நாடு திரும்பாத அண்ணாமலை! தில்லியில் என்ன நடக்கிறது?
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin


