9 ஆண்டுகளில் 100 பாம்புகளை பிடித்து மனித உயிர்களைக் காத்த தோட்டக் காவலர்: பொதுமக்கள் பாராட்டு

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த கொடிய விஷம் கொண்ட

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த கொடிய விஷம் கொண்ட 100-க்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டு, மனித உயிர்களை காத்து வரும் வனத்துறை தோட்டக் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
வாழப்பாடி வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. கிராமங்கள் நிறைந்த பகுதியென்றாலும் பாம்புகளைக் கண்டால் அடித்து கொல்லாமல், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற விழிப்புணர்வு, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பொதுமக்களிடையே இருந்து வருகிறது. 
வாழப்பாடி வனத்துறையில் 14 ஆண்டுகளுக்கு முன் சந்தனமர தோட்டக்காவலராக பணியில் சேர்ந்த முத்தையன் மற்றும் வனக்காவலர் முனீஸ்வரர் ஆகிய இருவரும், கடந்த 2010ம் ஆண்டு ஆத்துர் மாவட்ட வன அலுவலராக இருந்த நாகநாதன் என்பவரின் வழிகாட்டுதலின் பேரில், வாழப்பாடி அடுத்த பனைமடல் கிராமத்திலுள்ள வனத்துறை ஓய்வுவிடுதியில் நடைபெற்ற முகாமில் பாம்பு பிடிக்கும் முறை குறித்து பயிற்சி பெற்றனர்.
வாழப்பாடி வனச்சரகத்தில் தொடர்ந்து சந்தன மரத் தோட்டக்கவலராக பணிபுரிந்து வரும் முத்தையன், கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட கொடிய விஷத்தன்மை கொண்ட கழுதைவிரியன், கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், நாகம், கருநாகம், கோதுமைநாகம் உள்ளிட்ட பாம்புகளை லாவகமாக உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார்.
வாழப்பாடி பகுதியில், கடந்த ஒரே வாரத்தில் மட்டும் வெள்ளாளகுண்டத்தில் சுரேஷ் வீட்டில் கருநாகம், தமையனூர் கோழிப்பண்ணையில் மண்ணுளிப்பாம்பு, வாழப்பாடி சக்தி எலக்ட்ரானிக் கடையில் டிவி பெட்டிக்குள் பதுங்கியருந்த மஞ்சள் சாரை, வாழப்பாடி புதுப்பாளையம் வெற்றிச்செல்வன் வீடு மற்றும் சனிக்கிழமை மூதாட்டி லட்சுமி வீட்டுக்கூரையில் இருந்த கண்ணாடி விரியன் உட்பட குடியிருப்பு பகுதியில் திரிந்த 5 பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளார். 
வாழப்பாடி பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் புகும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகளை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டு, பாம்புக்கடிக்கு இரையாவதை தவிர்த்து ஏராளமான மனித உயிர்களை காத்த சந்தனத் தோட்டக்காவலர் முத்தையனுக்கு, பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com