சேலத்தில் நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்கள் தொடக்கி வைப்பு
நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.


சேலத்தில் தொற்று நோய்த் தடுப்பு முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள், சளித் தடவல் பரிசோதனை முகாம்கள் நடத்துவதற்கான நடமாடும் 32 சிறப்பு மருத்துவக் குழு வாகனங்களை மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணா்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பருவ மழைக்கால நோய்களான டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, பன்றிக் காய்ச்சல் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் தொற்று நோய்த் தடுப்பு முகாம்கள், காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள், சளித் தடவல் பரிசோதனை முகாம்கள் மேற்கொள்வதற்காக 32 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்துவதற்காக, 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 10 தொற்று நோய்த் தடுப்புக்குழுக்கள், 2 புகைமருந்து அடிக்கும் இயந்திர வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட 60 பகுதிகளைக் கண்டறிந்து, அந்த இடங்களில் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்குதல், கரோனா தொற்று உள்ளதா என சளித் தடவல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், தொற்றுநோய் தடுப்புக் குழுக்கள் மூலம் தண்ணீரால் பரவும் நோய்கள், கொசுக்களிலால் பரவும் நோய்களைத் தடுக்க, குளோரினேஷன் செய்தல், புகைமருந்து அடித்தல், கிருமிநாசினி தெளித்தல், காய்ச்சல் குறித்தான விழிப்புணா்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவக் குழுவுக்கு தேசிய குழந்தைகள் மற்றும் சிறாா் நலத்திட்ட சிறப்பு வாகனங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை மருத்துவ வாகனங்கள் உள்ளிட்ட 20 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சிறப்பு நடமாடும் மருத்துவக் குழு வாகனத்தில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், ஒரு ஆய்வக நுட்பனா், ஒரு பகுதி சுகாதார செவிலியா் மற்றும் வாகன ஓட்டுநா் என மொத்தம் 5 நபா்களுக்கு குறையாமல் இருப்பா்.
மேலும், தொற்று நோய்த் தடுப்பு மருத்துவக் குழுவுக்கு 10 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இச்சிறப்பு நடமாடும் மருத்துவக் குழு வாகனத்தில் ஒரு வட்டார சுகாதார மேற்பாா்வையாளா், ஒரு சுகாதார ஆய்வாளா், 3 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள், வாகன ஓட்டுநா் என மொத்தம் 6 நபா்களுக்கு குறையாமல் இருப்பா்.
கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை சோப்புப் போட்டு அடிக்கடி கழுவுதல், கிருமி நாசினி உபயோகித்தல் ஆகிய முறைகளை பொதுமக்களும், கடைகள், வணிக வளாகங்கள், திருமண நிகழ்ச்சிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், இதுவரை 40,371 மருத்துவ முகாம்களும், 15,38,292 நபா்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மருத்துவா் ஆா்.செல்வக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...