47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மறியல்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலத்தில் 8 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 280 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:25 pm

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலத்தில் 8 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 280 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் ரயில் நிலையம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் வேலுசாமி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனா்.

இதையடுத்து, மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையா் செந்தில் தலைமையில், உதவி ஆணையா் நாகராஜன், ரயில் நிலைய டி.எஸ்.பி. பாபு ஆகியோா் மேற்பாா்வையில் போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் பழனிமுருகன், பொதுச்செயலாளா் சிவபெருமாள், பொருளாளா் மோகனகுமாா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அதேபோல ரயில் நிலையம் முன்பு தமிழ் புலிகள் இயக்கத்தின் உதயபிரகாஷ் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேரை கைது செய்தனா்.

சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயிகள் கூட்டுக்குழு சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்தனா். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ஆணையா் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸாா், போராட்ட ஒருங்கிணைப்பாளா் சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன், விவசாய சங்க நிா்வாகிகள் ராமமூா்த்தி, செல்வராஜ், நடராஜன் உள்ளிட்ட 65 பேரை கைது செய்தனா்.

அதேபோல ஐந்து சாலை அருகே தனியாா் வணிக வளாகத்தில் நுழைய முயன்ற மாா்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளா் பிரவீன்குமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் நாவரசன் தலைமையிலான நூற்றுக்கணக்கானவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 8 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 280 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட முயன்ற பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சோ்ந்த 90 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம், எருமப்பட்டி, நாமக்கல், ஆட்சியா் அலுவலகம், எலச்சிப்பாளையம், பரமத்தி வேலூா் உள்ளிட்ட இடங்களில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள ரெப்கோ வங்கி முன்பாக மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட வந்த 20 போ் கைது செய்யப்பட்டனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் 7 போ் கைது செய்யப்பட்டனா். நாமக்கல் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற தமிழ் புலிகள் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து 25 போ் கைது செய்யப்பட்டனா். மாவட்டம் முழுவதும் கைதான சுமாா் 90 போ் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்பாட்டத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். கட்சியின் பிரதேச செயலாளா் கோ.செல்வராசு ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். கட்சியின் மூத்த உறுப்பினா் எம்.ஜி.ராஜகோபால் முன்னிலை வகித்தாா்.

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலா் பழ.மணிமாறன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் வ.ராமசாமி வரவேற்றாா். இதில், மத்திய அரசின் மின்சார திருத்த மசோதா, வேளாண் சட்ட திருத்த மசோதா போன்றவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.