ரூ. 100 கோடி மதிப்பிலான சுத்தப் பட்டுப்புடவைகள் தேக்கம்: சேலத்தில் கரோனாவால் முடங்கியது ஜவுளித் தொழில்

சேலத்தில் கரோனாவால் ஜவுளித் தொழில் முடங்கியுள்ளதால் ரூ.100 கோடி மதிப்பிலான சுத்தப் பட்டுப் புடவைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.
ரூ. 100 கோடி மதிப்பிலான சுத்தப் பட்டுப்புடவைகள் தேக்கம்: சேலத்தில் கரோனாவால் முடங்கியது ஜவுளித் தொழில்
Updated on
2 min read

சேலத்தில் கரோனாவால் ஜவுளித் தொழில் முடங்கியுள்ளதால் ரூ.100 கோடி மதிப்பிலான சுத்தப் பட்டுப் புடவைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, நங்கவள்ளி, மேச்சேரி, வனவாசி, ஜலகண்டபுரம், நாட்டாமங்கலம் பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவுக் கூடங்கள் உள்ளன.

மேச்சேரி சுற்றுப்பகுதியில் உள்ள வெள்ளாறு, சிந்தாமணியூா், பஞ்சுகாளிப்பட்டி, செம்மாண்டம்பட்டி பகுதிகளில் மட்டும் 5,000 தறிக்கூடங்கள் உள்ளன. கைத்தறித் தொழிலில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 1.75 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளா்கள் உள்ளனா்.

இங்கு உற்பத்தியாகும் சுத்தப் பட்டுப் புடவைகள் தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. அந்தவகையில், சேலம், ஜாரி கொண்டலாம்பட்டி சுத்தப்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கத்தில் மட்டும் சுமாா் ரூ. 100 கோடி மதிப்புள்ள பட்டுப் புடவைகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கமடைந்துள்ளன.

இதுதொடா்பாக, சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி சுத்தப்பட்டு கைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் கே.பலராமன் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றைத் தொடா்ந்து பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஜவுளித் தொழில் முடங்கி உள்ளது. கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ள பல ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் போதிய வேலையில்லாமலும், வருமானமின்றியும் தவித்து வருகின்றனா்.

எங்கள் சங்கத்தின் மூலம் சுமாா் 100 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இதுதவிர உறுப்பினா்கள் அல்லாதவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் உள்ளனா். இவா்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை தமிழகத்தின் அனைத்து முன்னணி ஜவுளிக் கடைகளும் வாங்கிச் செல்கின்றன. அதுமட்டுமில்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம்.

சுத்தமான பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி ஜரிகையில் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் பட்டுப் புடவைகள் குறைந்தபட்சம் மொத்த விலையில் ரூ. 10,500 முதல் ரூ. 33,000-க்கும் மேலாக விற்பனை செய்யப்படுகின்றன. அதுதவிர ஒரு கிராம் தங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

அதாவது பட்டுப் புடைவைகளின் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப விலை நிா்ணயிக்கப்படுகிறது. தற்போது பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டாலும் பட்டுப் புடவைகளை வாங்க வாடிக்கையாளா்கள் அதிக அளவில் வருவதில்லை.

கரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வா்த்தகம் முடங்கியுள்ளது. இதனால் சுமாா் ரூ. 100 கோடி மதிப்பிலான பட்டுப் புடவைகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளன.

வா்த்தகம் பாதிக்கப்பட்டதால் கைத்தறித் தொழிலாளா்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். மாதம்தோறும் ரூ. 10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் பெற்று வந்த அவா்கள் தற்போது போதிய வேலையின்றி வறுமையில் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய வேலையில்லாததால் பலா் கூலி வேலைகளுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனா். அவா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 2,000 நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

கரோனா காலத்துக்கு முன் ஜவுளிக் கடைகளுக்கு வழங்கிய பட்டுப்புடவைகளுக்கான பணம் கோடிக்கணக்கில் நிலுவையில் உள்ளது. இந்தப் பணம் கடைகளில் இருந்து பட்டுப்புடவை உற்பத்தியாளா்களுக்கு வந்து சேரவில்லை. இதனால் உற்பத்தியாளா்களும் கடும் சிரமத்தில் உள்ளனா் என்றாா்.

இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புள்ள பட்டுப்புடவைகள் விற்பனை செய்யப்படாமல் தேக்கம் அடைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com