ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர் 

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். 
ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி: முதல்வர் 

ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். 

சேலம், ஜூன் 12: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் வலது கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பதிவுகளை இயக்கி தண்ணீரை திறந்து விட்டார். மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். ஜனவரி 28 ஆம் தேதி 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு தேவைப்படும்.

பாசனப்பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும். மேட்டூர் அணை திறக்கப்பட்ட 86 ஆண்டு வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி 16 ஆண்டுகள் மட்டுமே  பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2008 இல் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்ததால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகள் ஜூன் 12-க்கு முன்பாகவே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஜூன் 12-க்கு பிறகு 60 ஆண்டுகள் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2019 ஆகஸ்ட் 13 ஆம் தேதி 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெள்ளிக்கிழமை 305 வது நாளாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வருகிறது.

கடந்த 2005-06ஆம் ஆண்டு தொடர்ந்து 427 நாட்கள் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் நடப்பு நீர்பாசன ஆண்டில் மேட்டூர் அணையின் வரலாற்றில் 87ஆவது ஆண்டாக டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின்விசையால் உயர்த்தி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். முதலில் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக 10,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர்கள் கே ஏ செங்கோட்டையன் பி தங்கமணி கே சி கருப்பண்ணன் வி சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 11 ஆண்டுகளுக்கு பிறகு குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு நடப்பு ஆண்டில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2011 இல் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12-க்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதன் முதலாக  1934 ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

தொடந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மேட்டூர் அணை தொடர்ந்து 399 நாள்களுக்கு மேலாக 100 அடிக்கு குறையாமல் உள்ளது. நீர்திறப்பு மூலம் 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் 38 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண்ணீர் வீணாவதை தடுக்க பாசன பகுதிகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3.25 லட்சம் ஏக்கரில் குறுவை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு 90 நாள்களுக்கு நீர் திறந்துவிடப்படும். மேட்டூர் அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரிக்குள் 100 ஏரிகளில் நீர் நிரப்படும். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வழிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டுவது வேதனை அளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com