வாழப்பாடியில் 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த நண்பர்கள்

இலங்கையில் பிறந்து, வளர்ந்து, ஒரே பள்ளியில் படித்து, 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தஞ்சமடைந்த நண்பர்கள் இருவர், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்டனர்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் கணேசனும் மகேஸ்வரனும்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள் கணேசனும் மகேஸ்வரனும்.


வாழப்பாடி: இலங்கையில் பிறந்து, வளர்ந்து, ஒரே பள்ளியில் படித்து, 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தஞ்சமடைந்த நண்பர்கள் இருவர், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்து அன்பை பகிர்ந்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அண்டை நாடான இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர் கணேசன் (60). அதே பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன்(50).

இருவரும் பலாங்கொடை பகுதியிலுள்ள சி சிஓஎம் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட போர் உள்ளிட்ட உள்நாட்டு பிரச்சினைகளினால், இவரது பெற்றோர் இவர்களை அழைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வந்து விட்டனர்.

மகேஸ்வரன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியிலும், கணேசன் குடும்பத்தினர், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் குடியேறினர்.

கணேசன், சேலம் வணிகவரித் துறையில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது குடும்பத்தோடு வாழப்பாடி வருகிறார். மகேஸ்வரன் அரியலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் பிட்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இருவரும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு திரும்பிய பிறகு, ஏறக்குறைய 50 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் அவ்வப்போது தொலைபேசி வாயிலாகவும், சமீபகாலமாக செல்லிடப் பேசிகள் வழியாகவும் இருவரும்  ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு தொடர்பிலேயே இருந்து வந்தனர்.  

வாழப்பாடி சேர்ந்த கணேசன் குடும்பத்தினர், செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள  குன்னம் ஆயக்குடி கிராமத்தில் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து வேப்பூர் பகுதியில் வசித்து வரும் இலங்கையில் தன்னுடன் பள்ளியில் படித்த தனது பால்ய சினேகிதன் மகேஸ்வரனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, தன்னோடு இலங்கையில் படித்த பள்ளி வயது தோழன் கணேசனை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு காண்பதற்காக ஆவலோடு காத்திருந்த மகேஸ்வரன், தனது இருசக்கர வாகனத்தில் ஆயக்குடி கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

சிறு வயதில் பார்த்த முகத்தை மனதில் பதிய வைத்திருந்த இருவரும், 50 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட நேரில் சந்தித்துக் கொண்டபோது, எளிதாக அடையாளம் கண்டு கொண்டனர். இருவரும் கட்டி அணைத்து கண்ணீர் மல்க நட்பை பரிமாறிக் கொண்டனர். தனது பால்ய சினேகிதன் மகேஸ்வரனுக்கு, கணேசன் அசைவ விருந்தளித்தார். தனது நண்பனை தனது குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்து நெகிழ்ச்சி ஏற்படுத்தினார்.

இலங்கையில் ஒன்றாய் படித்த நண்பர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்டு அன்பை பரிமாறிக் கொண்ட சம்பவம் இருவரது குடும்பத்தினர் உறவினர்கள் இடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி சேர்ந்த கணேசன் கூறியதாவது, இலங்கையில் இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொடை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்தபோது, நானும் மகேஸ்வரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.

உள்நாட்டுப்போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளினால் இலங்கையை விட்டு குடும்பத்தோடு வெளியேறி  தமிழகத்தில் குடியேறினோம். இருப்பினும் நண்பர்களுடன் தொடர்பு விட்டுவிடாமல், தொலைபேசி வாயிலாகவும், கடிதங்கள் மூலமாகவும் நட்பை தொடர்ந்து வந்தோம்.

இலங்கையிலுள்ள நண்பர்களிடமும் இன்றளவிலும் நட்பு பாராட்டி வருகிறோம். ஆனால் 50 ஆண்டுகளாக மகேஸ்வரனை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. செவ்வாய்க்கிழமை ஆயக்குடி கிராமத்திற்கு பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு குலதெய்வ வழிபாடு செய்யச் சென்றபோது வேப்பூரில் வசித்து வரும் மகேஸ்வரனை வரவழைத்து நேரில் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு ஆகிப்போனது. இது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com