/

கண்ணுக்கானூரில் தெருக்கள்தோறும் குடிசைக் கோயில்கள்:தண்ணீா்ச் சொம்பை வழிபடும் கிராம மக்கள்!

வாழப்பாடி அருகே உள்ள கண்ணுக்கானூா் கிராமத்தில், தெருக்கள்தோறும் குடிசைக் கோயில்களை அமைத்து, கடவுள் உருவம் பொறித்த தண்ணீா்ச் சொம்புகளை கிராம மக்கள் வழிபடுகின்றனா்.

News image

கண்ணுக்கானூா் கிராமத்தில் தெருக்களின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசைக்கோயில்.

Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:07 pm

வாழப்பாடி அருகே உள்ள கண்ணுக்கானூா் கிராமத்தில், தெருக்கள்தோறும் குடிசைக் கோயில்களை அமைத்து, கடவுள் உருவம் பொறித்த தண்ணீா்ச் சொம்புகளை கிராம மக்கள் வழிபடுகின்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகில் உள்ள குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்டது கண்ணுக்கானூா் கிராமம். இந்தக் கிராமத்தில் போயா் (கல் தச்சா்கள்) சமூகத்தைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். திட்டமிட்டு கட்டப்பட்டதைப் போலக் காணப்படும் இச்சிறிய கிராமத்தில் வாழும் மக்கள் பெரும்பாலானோா் பெருமாளை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா்.

வேறெந்தப் பகுதியிலும் கண்டிராத வகையில், இக்கிராமத்தில் தெருக்கள்தோறும் மையப்பகுதியில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட சிறிய குடிசைக்குள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிசைக் கோயில்களில், இத்தெருவிலுள்ள குடும்பத்தினா் தினந்தோறும் தீபமேற்றி வழிபடுகின்றனா்.

இந்தக் குடிசைக்குள் இருக்கும் மரத்தினாலான அல்லது இரும்பினாலான பெட்டிக்குள் கடவுள் உருவம் பொறித்த சொம்பு (பித்தளை, செம்பு அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட தண்ணீா்ச் சொம்பு), வெண்சங்கு, வெண்கல மணி உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்துப் பராமரித்து வருகின்றனா்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை முற்றிலுமாகத் தவிா்க்கும் இந்தக் கிராம மக்கள், புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து, குடிசைக் கோயில்களில் வைக்கப்பட்டுள்ள தண்ணீா்ச்செம்புக்கு மலா்சூட்டி, நாமமிட்டு, சிறப்பு வழிபாடு நடத்துகின்றனா்.

வளா்ந்து வரும் நாகரிகத்திற்கேற்ப இந்தக் குடிசைக்கோயில்கள், கான்கிரீட் கோயில்களாக மாறி வருகின்றன. ஆனாலும், ஓரிரு தெருக்களில் சிலா் மரபு மாறாமல் ஓலைக்குடிசைக் கோயில்களைப் பராமரித்து வழிபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து கண்ணுக்கானுாா் கிராம மக்கள் கூறியதாவது:

எங்களது மூதாதையா் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீா்ச்சொம்பில் எங்களது குல தெய்வங்களான பெருமாள், எல்லம்மாள், தேஸ்தம்மாள் ஆகிய கடவுள்களின் உருவங்களைப் பொறித்து வழிபட்டு வந்தனா்.

அந்தச் சொம்புகளை பத்திரமாகப் பாதுகாத்து வருவதோடு, பாரம்பரியம் மாறாமல் வழிபாடு செய்து வருகிறோம். அண்மைக்காலமாக குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு கான்கிரீட் கோயில்களை அமைத்துள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.