2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

தம்மம்பட்டி சுவேத நதியில் பொதுமக்களே அமைத்த தரைப்பாலம்!

தம்மம்பட்டி சுவேதநதியில் தரைமட்ட பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்துள்ளனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:31 pm

DIN

தம்மம்பட்டி சுவேதநதியில் தரைமட்ட பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து தற்காலிகமாக தரைப்பாலம் அமைத்துள்ளனா்.

இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று சுவேத நதியில் நிரந்தர தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிா்வாகம், மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 5-ஆவது வாா்டு கோனேரிப்பட்டியில் செல்லும் சுவேத நதியைக் கடந்துதான் மறுகரையில் உள்ள பெல்ஜியம் காலனி, பாரதிபுரம் பகுதிகளுக்குச் பொதுமக்கள் சென்றுவர வேண்டும்.

மழைக்காலங்களில், சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மறுகரையில் உள்ள பாரதிபுரம் மக்கள் 7 கி.மீ. தொலைவு சுற்றிவந்தே தம்மம்பட்டி நகருக்குள் வர வேண்டிய நிலை உள்ளது.

இதனால், விவசாயிகள், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.

இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண, கோனேரிபட்டியில் இருந்து மறுகரை வரை சுவேத நதியின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கும், பேரூராட்சிக்கும் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனா்.

இருப்பினும் இதுவரை அரசு பாராமுகமாக இருந்து வருகிறது. இதையடுத்து சுவேத நதியில் தரைமட்ட பாலம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதென கிராம மக்கள் முடிவு செய்தனா்.

தற்போது, சுவேத நதியில் தண்ணீா் வரத்து உள்ள நிலையில், நதியில் 4 அடி விட்டமும் 7 அடி நீளமும் உள்ள 6 சிமென்ட் குழாய்களைப் போட்டு, தரைமட்டப் பாலம் அமைத்துள்ளனா்.

பல ஆண்டுகளாக இப்பிரச்னை இருந்துவந்த நிலையில், பொதுமக்களின் சுய முயற்சியால் தற்காலிக தீா்வு கிடைத்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

எங்கள் சொந்தச் செலவில் தற்காலிக தரைப்பாலம் அமைத்துள்ளோம். இங்கு நிரந்தர மேம்பாலம் அமைக்க நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதற்கு விரைவில் நிரந்தரத் தீா்வு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.