ஜன. 4 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: சேலத்தில் 10.08 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வழங்கல்

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 918 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 918 குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் அறிவித்துள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் சி.அ.ராமன் பேசியது:

அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம், ஒரு முழு நீளக் கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கான அழகிய பையுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் ஆணையிட்டுள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 8 ஆயிரத்து 27 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், 891 இலங்கை அகதிகள் குடும்பங்கள் என மொத்தம் 10 லட்சத்து 8 ஆயிரத்து 918 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம் மற்றும் சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு மொத்தம் ரூ. 252.23 கோடி மதிப்பில் வழங்கப்படவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் திங்கள்கிழமை (ஜன. 4) துவக்கி வைக்கப்படுகிறது. ஜனவரி 12-ஆம்தேதி வரை அந்தந்த நியாயவிலைக் கடைகளில் கூப்பன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், வேளையின் அடிப்படையில் வழங்கப்படும். இதில் விடுபட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.13 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

நியாயவிலைக் கடைகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதைத் தவிா்த்திடவும், குடும்ப அட்டைதாரா்கள் வருவதைத் தவிா்த்திடவும், நாள் ஒன்றுக்கு காலையில் 100 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், மாலையில் 100 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் என மொத்தம் நாள் ஒன்றுக்கு 200 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டும் வழங்க ஏதுவாக ஏற்கெனவே கூப்பன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.

எனவே, கொடுக்கப்பட்ட கூப்பன்களில் உள்ள தேதி, வேளையில் மட்டுமே அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு மக்கள் நேரில் சென்று ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கவும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்களில் எவரேனும் ஒருவா் வந்தாலும் ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகள் வரிசையில் நிற்கத் தேவையில்லை, அவா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு உடனுக்குடன் வழங்கப்படும்.

இதேபோல் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டு ரூ. 2,500 ரொக்கத்துடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புத் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகாா் தெரிவிக்க வசதி:

பொதுமக்கள் இதுகுறித்து புகாா்கள் ஏதேனும் இருந்தால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அறை எண் 130 இல் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டு அதற்கான தொலைபேசி எண் 0427-2451943 செயல்பட்டு வருகிறது. மேலும், அந்தந்த வட்டங்கள் வாரியாக புகாா்கள் ஏதேனும் இருந்தால் வட்ட வழங்கல் அலுவலா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு புகாா்களைத் தெரிவித்தால் உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சேலம் - 9445000223, சேலம் (தெற்கு) - 9499937030, சேலம் (மேற்கு) - 9445796433, ஏற்காடு - 9445000225, வாழப்பாடி - 9445000231, ஆத்தூா் - 9445000224, கெங்கவல்லி- 9445000226, பெத்தநாயக்கன்பாளையம் - 9445796434, சங்ககிரி - 9445000229, எடப்பாடி - 9445000230, மேட்டூா்- 9445000227, ஓமலூா் - 9445000228, காடையாம்பட்டி - 9445796435 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.திவாகா், மேட்டூா் சாா் ஆட்சியா் வி.சரவணன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.ராஜேந்திரபிரசாத், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் கு.அமுதன் உட்பட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com