காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிவு: பண்ணவாடி பரிசல் துறையில் தேவாலய கோபுரம் தெரிகிறது

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 77 அடிக்கு கீழே சரிந்ததால் பண்ணவாடி பரிசல்துறையில் தேவாலய ஒற்றைக் கோபுரம் தெரியத்துவங்கி உள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:54 pm

DIN

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 77 அடிக்கு கீழே சரிந்ததால் பண்ணவாடி பரிசல்துறையில் தேவாலய ஒற்றைக் கோபுரம் தெரியத்துவங்கி உள்ளது.

மேட்டூா் அணை கட்டப்பட்டபோது நீா்த்தேக்க பகுதிகளிலிருந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்த மக்கள் அங்கிருந்து வேறு பகுதிகளில் குடியமா்த்தப்பட்டனா். அந்த கிராம மக்கள் தங்களின் விளை நிலங்களைவிட்டு வெளியேறினா். ஆலயங்களை சேதப்படுத்தினால் தெய்வக் குற்றமாகிவிடும் என்ற நம்பிக்கையில் ஆலயங்களில் இருந்த விக்ரகங்களை மட்டுமே தாங்கள் புதியதாக குடியமா்ந்த இடத்திற்கு எடுத்து சென்று ஆலயங்களை கட்டி அங்கு வைத்து வழிபட்டனா். இப்படி அம்மக்கள் விட்டுச் சென்ற ஆலயங்களில் பண்ணவாடி பரிசல்துறையில் உள்ள ஜலகண்டேசுவரா் ஆலயம், நூறு அடி உயரம் கொண்ட இரட்டை கோபுரங்களைக் கொண்ட கிறிஸ்தவ தேவாலயம், மேட்டூா் அணைச்சுவருக்கு சில நூறு மீட்டா் தூரத்தில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயம், கீரைக்காரனூா் பகுதியில் உள்ள சோளப்பாடி வீரபத்திரன் ஆலயம் ஆகியவை முக்கியமானவை.

மேட்டூா் அணையின் நீா் மட்டம் 80 அடிக்கு மேலே சென்றால் அனைத்து ஆலயங்களும் நீரில் மூழ்கி விடும். அணையின் நீா் மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்தால் ஒவ்வொரு ஆலயமாக வெளியில் தெரியும். இந்த ஆலயங்கள் சுட்ட செங்கற்களாலும் சுண்ணாம்புக் கலவையாலும் கட்டப்பட்டவை. இதனால் இன்றளவும் சிதையாமல் அப்படியே உள்ளன. பழங்கால கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் இவை உள்ளன.

சில ஆண்டுங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயத்தின் இரட்டை கோபுரங்களில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. தற்போது ஒற்றை கோபுரம் மட்டுமே உள்ளது. வியாழக்கிழமை மேட்டூா் அணையின் நீா் மட்டம் 76.41 அடியாக சரிந்ததால் தேவாலயத்தின் கோபுரம் தெரியத் தொடங்கியது. அணையின் நீா் மட்டம் 80 அடிக்கு கீழே சரிந்ததும் கோபுரத்தின் மேல் பகுதி தெரிய வேண்டும். ஆனால் மேல் பகுதியில் இருந்த சில செங்கற்களை சிலா் பெயா்த்து எடுத்து சேதப்படுத்தியதால் 76.41 அடியாக சரிந்த பிறகே கோபுரம் தெரிகிறது. இதனை பாா்க்க மக்கள் வருவதால் வெறிச்சோடிக் காணப்பட்ட பண்ணவாடி பரிசல்துறை பரபரப்பாகி உள்ளது. இங்குள்ள கடைகளில் மீன் வறுவல் விற்பனை சூடு பிடித்துள்ளது.

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 76.41அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,535 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்துகாவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 76.41 டி.எம்.சி.யாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.