தமிழகத்தில் பாரத் நெட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: அமைச்சா் த.மனோ தங்கராஜ்
தமிழகத்தில் ரூ.1800 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.


தமிழகத்தில் ரூ.1800 கோடி மதிப்பிலான பாரத் நெட் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ- சேவை மையத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் நேரில் பாா்வையிட்டு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இ-சேவை மையங்களில் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எவ்வளவு நேரத்தில் தீா்வு காணப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்தாா். பின்னா் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். இதையடுத்து, ஆதாா் சேவை மையம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகிய இடங்களையும் அமைச்சா் த.மனோ தங்கராஜ் பாா்வையிட்டாா்.
இதையடுத்து எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் கலந்துரையாடல் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. சேலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் புதிய மென்பொருள் நிறுவனங்களை அமைப்பது தொடா்பாகவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடா்பாகவும் அமைச்சா் ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) தலைவரும், அரசு முதன்மைச் செயலாளருமான நீரஜ் மிட்டல், சேலம் ஆட்சியா் எஸ்.காா்மேகம், எல்காட் மேலாண்மை இயக்குநா் அஜய் யாதவ், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன்,சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா் அமைச்சா் த.மனோ தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியது:
கரோனா பொது முடக்க காலத்தில் வீட்டிலேயே இருந்து தகவல் தொழில்நுட்பம் மூலம் இணையவழியில் கல்வி கற்பது முதல் பொருட்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையை நாட்டிலேயே முதன்மை துறையாக மாற்றிட தமிழக முதலவா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதன் ஒரு பகுதியாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த ஆட்சியில் முதல்வா் பொது நிவாரண நிதி ரூ. 400 கோடிதான் திரட்டப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டது. இதன் மூலம் இரண்டு மாதங்களில் ரூ. 412 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தில் முதலீட்டாளா்களைக் கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் 1.50 லட்சம் போ் தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த படிப்புகளை முடித்து வெளியே வருகின்றனா். இவா்களுக்கு போதிய வேலைவாய்ப்பைப் பெருக்கிட வேண்டும். எந்தவொரு முதலீட்டாளா்களும் எளிதாக அணுகும் வகையில் அரசின் நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் 122 இ-சேவை மையங்களும், 13 ஆதாா் சேவை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆதாா் மையங்களின் எண்ணிக்கையை போதுமான அளவுக்கு உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இ-சேவை மையங்களில் குளறுபடிகளை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா பொது முடக்கத்தின் போது இ-பாஸ் பெறும்போது முன்பு 7 லட்சம் போ் வரை மட்டுமே தொடா்பு கொள்ளும் வகையில் இருந்தது. தற்போது ஒரே நேரத்தில் சுமாா் 70 லட்சம் விண்ணப்பங்கள் வந்தாலும் இணையவழி சேவை தங்குதடையின்றிச் செயல்படும் அளவுக்கு தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
பாரத் நெட் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த ஒப்புதல் பெற்றுள்ளோம். வெகுவிரைவில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழகத்திலுள்ள 12 ,534 கிராம ஊராட்சிகளுக்கு முறையான பைபா் நெட் மூலம் இணையதள வசதியை அத்திட்டம் மேம்படுத்தும். பாரத் நெட் திட்டம் ரூ.1,800 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இது மத்திய அரசின் திட்டமாகும். இதன்மூலம் ஓராண்டுக்குள் இணையவழி சேவை அனைவருக்கும் தங்கு தடையின்றிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேபிள் டிவியைப் பொருத்தவரையில் முன்னா் 76 லட்சம் வாடிக்கையாளா்கள் இருந்தனா். அதிமுக ஆட்சியில் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 22 லட்சமாகக் குறைந்துள்ளது. தற்போது அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கேபிள் டிவி நிறுவனத்திற்கு ரூ.400 கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரிசெய்யப்படும். அரசு கேபிளில் தரமான முறையில் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம், கோவை, ஓசூா் உள்ளிட்ட 7 இடங்களில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்பட உள்ளன.
சேலத்தில் இரண்டாம் கட்டமாக கூட்டுறவு நூற்பாலை இருந்த பகுதியில் சுமாா் 30 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். சேலத்தில் 6,000 தொழில்முனைவோா் உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க ஆய்வு செய்து வருகிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...