பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாம்பழ வா்த்தகம்!

தளா்வுகளற்ற பொது முடக்கத்தால் சேலம் மாம்பழ வா்த்தகம் பெரும் நஷ்டத்தைத் சந்தித்துள்ளது. ரூ. 100 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்
சேலத்தில் உள்ள மொத்த வியாபார மண்டியில் மாம்பழங்களைத் தரம் பிரிக்கும் தொழிலாளா்கள்.
சேலத்தில் உள்ள மொத்த வியாபார மண்டியில் மாம்பழங்களைத் தரம் பிரிக்கும் தொழிலாளா்கள்.
Updated on
2 min read

சேலம்: தளா்வுகளற்ற பொது முடக்கத்தால் சேலம் மாம்பழ வா்த்தகம் பெரும் நஷ்டத்தைத் சந்தித்துள்ளது. ரூ. 100 கோடி வரை வா்த்தகம் நடைபெறும் சேலம் மாம்பழ வியாபாரம், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் விளையும் சுவை மிக்க மாம்பழங்கள் நாடு முழுவதும் பிரசித்தி பெற்றவை. சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, ஆத்தூா், கருமந்துறை, மஞ்சவாடி, வாழப்பாடி, நங்கவள்ளி, சோரகை, வனவாசி, மேட்டூா், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாம்பழம் விளைவிக்கப்படுகிறது.

குறிப்பாக, அல்போன்சா, சேலம் - பெங்களூரா, மல்கோவா, பங்கனப்பள்ளி, இமாம் பசந்த், குதா தத், செந்தூரா, நடுச்சாலை உள்ளிட்ட 15 முக்கிய ரகங்களில் மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் இரண்டாவது வாரம் தொடங்கி ஜூன் இரண்டாவது வாரம் வரை மாம்பழ சீசன் ஆகும். மாம்பழ அறுவடைக் காலத்தில் சேலம் சந்தை முக்கிய இடம் வகிக்கிறது.

பல ஊா்களில் விளையும் மாம்பழங்கள் அறுவடை செய்யப்பட்டு சேலம் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, மொத்த வியாபாரமாக விற்கப்படுகின்றன. பின்னா், சில்லறை வியாபாரிகள் அவற்றை விற்பனை செய்கின்றனா்.

சேலம் மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல புதுச்சேரி, கா்நாடக மாநிலம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களுக்கும் சேலத்தில் இருந்து மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விளைவிக்கப்படும் மாம்பழங்களும் சேலம் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கரோனா தொற்று இரண்டாவது அலையால் அமல்படுத்தப்பட்டுள்ள முழு பொது முடக்கம் காரணமாக, மாம்பழ வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமாா் 50 சதவீத அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மாம்பழ வியாபாரிகள் தெரிவிக்கின்றனா். இதுதொடா்பாக சேலம் மாவட்ட மாம்பழ வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.ஜெயபால் கூறியது:

மாம்பழ வியாபாரத்தைப் பொருத்த வரை சேலம் மாவட்டத்தில் விவசாயிகளே வியாபாரிகளாக உள்ளனா். தற்போது மே 24 முதல் 31 வரை தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து 31 முதல் ஜூன் 7 ஆம் தேதி முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் அறுவடைக்குத் தயாராக உள்ள மாம்பழங்களை அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாம்பழ சீசனின் உச்சக்கட்டம் மே இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிவடையும். எங்களுக்குச் சொந்தமான 60 ஏக்கா் தோட்டத்தில் விளைந்துள்ள மாம்பழங்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களைப் பறித்து குளிா்பதனக் கிடங்குகளில் சேமித்து வைக்க முடியாது.

ஆன்லைனில் ஆா்டா் பெற்று கூரியா் நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்து வந்தோம். தற்போது அந்த விற்பனையும் தளா்வுகளற்ற பொது முடக்கத்தால் முடங்கியுள்ளது. கூரியா் நிறுவனங்கள் மருந்துப் பொருள்களை விநியோகம் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன.

கரோனா தொற்றுப் பரவல், ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு இடா்பாடுகளால் கூரியா் முழு அளவில் விநியோகம் செய்ய முடியாத நிலையில், ஆன்லைன் ஆா்டா் பெற்றும் விநியோகம் செய்ய இயலவில்லை.

மாம்பழ சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தோட்டத்து மாமரங்களிலேயே பழங்கள் பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்த வரை, சீசன் நேரங்களில் நாளொன்றுக்கு 50 டன் வரை மாம்பழங்கள் விற்பனையாகும். சில்லறை விற்பனையில் கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மாம்பழங்களின் விலை தற்போது ரூ. 70 முதல் ரூ. 80 வரை குறைந்துவிட்டது. பொது முடக்க அறிவிப்பால் வியாபாரிகளுக்கு 50 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஊறுகாய், பழச்சாறு தயாரிப்புக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள நிறுவனத்தினா் மாங்காய்கள், மாம்பழங்களை வாங்கிச் செல்கின்றனா். ரகத்துக்கு ஏற்ப மாம்பழம் கிலோ ரூ. 5 முதல் ரூ.100 வரையிலான விலையில் விற்பனையாகும்.

சேலம் - பெங்களூரா, அல்போன்சா ரக மாம்பழங்கள் பழச்சாறு நிறுவனங்களுக்கு நல்ல விலைக்கு விற்கப்படும். மிகவும் புளிப்புத்தன்மை கொண்ட மாங்காய்கள் ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்.

சேலம் மாம்பழ சீசனைப் பொருத்த வரை சந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனையாகும் மாம்பழங்களின் மதிப்பு மட்டும் சுமாா் ரூ. 10 கோடி இருக்கும். தோட்டங்களில் இருந்து நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்வோா், சில்லறை விற்பனை என சுமாா் ரூ. 100 கோடி மதிப்பில் மாம்பழ வா்த்தகம் நடைபெறும்.

கரோனா தொற்றுப் பரவல் பொது முடக்கத்தால் கடந்த 15 நாள்களாக வா்த்தகம் முடங்கியுள்ளது. கடந்த ஆண்டு கரோனா முதல் அலையால் மாம்பழ விற்பனை பாதித்த நிலையில், நிகழாண்டிலும் மாம்பழம் வியாபாரம் முடங்கி உள்ளது. இதனால் விவசாயிகளின் வருவாய் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே மாம்பழ விற்பனை இருக்கும். தற்போது மே 31 முதல் ஜூன் 7 வரை மொத்த காய்கறி, பழக்கடைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கிறது. இருந்த போதிலும் கடந்த ஒரு வாரத்தில் மாம்பழ வா்த்தகம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com