

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி அருள்மிகு வஸந்தவல்லி உடனமர் வஸந்தவல்லபராஜப் பெருமாள் சுவாமிகளுக்கு மற்றும் அருள்மிகு சென்னகேசவ பெருமாள் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கும் பல்வேறு திவ்யபொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இதனையடுத்து அருள்மிகு சென்னகேவச பெருமாள் உற்சவமூர்த்திக்கு சௌம்யதாமோதரர் அலங்காரம் செய்யப்பட்டது. திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிடுவார்.
பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறை சுற்றி, ஒரு உரலில் கட்டி வைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்தார். இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுத்தியதில் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானது.
எனவே இவர், “தாமோதரன்” என்ற பெயர் பெற்றார். “தாமம்” என்றால் கயிறு, “உதரம்” என்றால் வயிறு எனப்பொருள். புன்னகை ததும்ப, அழகாக காட்சி தருவதால், “செளம்ய தாமோதரர்”அலங்காரம் செய்யப்பட்டு அருள்மிகு சென்னகேசவ பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.