பச்சமலை அடிவாரம் வேப்படியில் அணை கட்டப்படுமா? 30 ஆண்டுகளாக காத்திருக்கும் 3 கிராம மக்கள்!

பச்சமலை அடிவாரம் வேப்படி கிராமத்தில்  அணை கட்ட வேண்டுமென  3 கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து 30 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
பச்சமலையில் இருந்து வேப்படி கிராமத்திற்கு வழிந்தோடி வரும் கருப்புசாமி கோயில் நீரோடை (கோப்புப்படம்).
பச்சமலையில் இருந்து வேப்படி கிராமத்திற்கு வழிந்தோடி வரும் கருப்புசாமி கோயில் நீரோடை (கோப்புப்படம்).
Published on
Updated on
2 min read

வாழப்பாடி: சேலம் மாவட்டம் பச்சமலையின் வடகிழக்கு பகுதியில் வழிந்தோடி வீணாகி வரும் மழைநீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கு, பச்சமலை அடிவாரம் வேப்படி கிராமத்தில்  அணை கட்ட வேண்டுமென  3 கிராமங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்து 30 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சேலம், திருச்சி மற்றும் பெரம்பலுார் மாவட்டங்களை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் பச்சமலையின் வடகிழக்கு பகுதியில் இருந்து  நல்லமாத்தி, சின்னநாகூர், பெரியநாகூர் கிராமங்கள் வழியாக வழிந்தோடி வரும் மழைநீர், பச்சமலை அடிவாரம் புளியம்பட்டி, வேப்படி மற்றும் பாலக்காடு வழியாக கருப்புசாமி கோயில் நீரோடையில் சங்கமித்து பெரம்பலுார் மாவட்டம் பூலாம்பாடி, அரும்பாவூர் பகுதிக்கு வழிந்தோடி செல்கிறது.

பச்சமலை அடிவாரம் வேப்படி கிராமத்தில் அணை கட்டுவதற்கேற்ற புளிம்பட்டி அரசு புறம்போக்கு தரிசு நிலப்பகுதி.
பச்சமலை அடிவாரம் வேப்படி கிராமத்தில் அணை கட்டுவதற்கேற்ற புளிம்பட்டி அரசு புறம்போக்கு தரிசு நிலப்பகுதி.

மழை காலத்தில் வழிந்தோடி வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த எவ்வித கட்டுமானங்களும் இல்லாததால், கருப்புசாமி கோயில் நீரோடையில் ஒட்டுமொத்த மழைநீரும் பெரம்பலுார் மாவட்ட எல்லைக்கு வழிந்தோடி சென்று வீணாகி வருகிறது.  

வேப்படி கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இரு மலைக்குன்றுகளுக்கு இடையே, கருப்புசாமி கோயில் நீரோடை சங்கமிக்கும் புளியம்பட்டி பகுதியில், மழைநீரை தேக்கி வைப்பதற்கு ஏறக்குறைய 35 அடி உயரத்திற்கு அணை கட்டுவதற்கேற்ப, 80 ஏக்கருக்கு மேல் தீர்வை ஏற்படாத தரிசு நிலம் காணப்படுகிறது.

இப்பகுதியில் அணை கட்டி, வழிந்தோடி வீணாகி வரும் மழைநீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கு சேலம் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வேப்படி, புளியம்பட்டி, பாலக்காடு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து, 30 ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து வேப்படி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

பச்சமலையின் வடகிழக்கு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர், கருப்புசாமி கோயில் நீரோடையில் வழிந்தோடி பெரம்பலுார் மாவட்ட கிராமங்களுக்கு சென்று வீணாகி வருகிறது. இந்த நீரை தேக்கி வைப்பதற்கேற்ப, இரு மலைக்குன்றுகளுக்கு இடையே 80 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு தரிசு நிலம் உள்ளது.  பச்சமலை அடிவாரத்தில்  நீரோடைகள் சங்கமிக்கும் வேப்படி கிராமம் புளியம்பட்டி பகுதியில் அணை  கட்டினால், 3 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின்  ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

எனவே, இப்பகுதியில் ஆய்வு செய்து, அணை கட்டுவதற்கு சேலம் மாவட்ட நிர்வாகமும்,  தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com