சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழக-கர்நாடக அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதாசிவம் கமிஷனால் அறிவிக்கப்பட்ட இரண்டரை கோடி ரூபாய் பணம் உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2004ஆம் ஆண்டு தமிழக அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தன வீரப்பனின் உடல் மேட்டூர் அடுத்த மூலக்காடு காவிரிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டம் மேட்டூர் வந்த தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் திரைப்பட இயக்குனருமான கௌதமன் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள சமாதி அருகே சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் கெளதமன் கூறியதாவது, "2008ஆம் ஆண்டில், கலைஞர் கருணாநிதியால் ரூ. ஒரு லட்சம் பணம் மற்றும் சிறந்த சின்னத்திரை இயக்குனருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டது.
வள்ளுவர் கோட்டத்தில் விருது வழங்கும் போது எனக்கு இந்த விருது கொடுப்பதை விட அதிரடிபடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதாசிவம் கமிஷனால் இரண்டரை கோடி ரூபாய் பணத்தை வழங்க வேண்டும்.
அவ்வாறு கொடுத்தால் நீங்கள் கொடுக்கும் விருதை விட மேலானதாக நான் அதை பார்த்தேன் என கலைஞரிடம் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த தொகையை வழங்குவதாக கலைஞர் தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் நான் கேட்பது என்னவென்றால் சதாசிவம் கமிஷன் அடிப்படையிலும், கலைஞர் அவர்கள் ஒத்துக் கொண்ட அடிப்படையிலும் இரண்டரை கோடி ரூபாய் பணம் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
மறைந்த மாநில வன்னியர் சங்க தலைவர் ஜெ. குரு வாழ்க்கை வரலாறு பற்றி திரைப் படம் எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சந்தன வீரப்பனுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும் இல்லையென்றால் வன்னியர் சமூகம் அதற்கான வேலைகளை செய்து முடிக்கும் அதனை செய்ய வேண்டியவர்கள் செய்வார்கள். இல்லையென்றால் தமிழ் பேரரசு கட்சி சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.