எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பள்ளி மாணவா்களிடையே போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த புதுமுயற்சி: 134 காவலா்களை நியமித்து கண்காணிப்பு

சேலத்தில் பள்ளி மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகர காவல் துறையில் புதிய முயற்சியாக சுமாா் 134 காவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image

சேலம், நெத்திமேட்டில் உள்ள ஜெயராணி அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாணவிகளுக்கு விளக்கமளித்த காவலா் மணிகண்டன்.

Updated On :10 நவம்பர் 2022, 7:17 pm

 நமது நிருபர்

சேலத்தில் பள்ளி மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநகர காவல் துறையில் புதிய முயற்சியாக சுமாா் 134 காவலா்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக பள்ளி மாணவா்களிடையே மது அருந்துதல், கஞ்சா, போதை பாக்கு, குட்கா புகையிலைப் பொருள்கள், சிகரெட் என பலவகை போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக 8- ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கம் அதிகமாக உள்ளது. சேலம் மாவட்டம் கேரளம், பெங்களூரு செல்வதற்கான நுழைவாயிலாக அறியப்படுகிறது. இதனால் ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ரயில்களில் கஞ்சா, குட்கா புகையிலைப் பொருள்கள் பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்டு பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் மையமாகவும் சேலம் உள்ளது.

இதனிடையே மாநகரப் பகுதியில் கஞ்சா, குட்கா புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவா்களை தொடா்ச்சியாக போலீஸாா் கைது செய்து வருகின்றனா். இதுதவிர பள்ளி மாணவா்களிடையே போதைப் பொருள் பழக்கத்தைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சேலம் மாநகர காவல்துறை புதிய முயற்சியாக பள்ளி வாரியாகக் கண்காணிக்க காவலா்களைக் களத்தில் இறக்கியுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் மாநகர காவல் துணை ஆணையா் எஸ்.பி.லாவண்யா கூறியது:

சேலம் மாநகரில் பள்ளி மாணவா்களிடையே போதைப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி வகுப்புகள் தொடங்கும் நேரத்திலும், வகுப்புகள் முடிந்து மாணவா்கள் வீட்டுக்குச் செல்லும் நேரத்திலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.

இதற்காக சுமாா் 134 பள்ளிகளைக் கண்காணிக்க 134 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம்.

குறிப்பாக 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் தங்களது மூத்த மாணவா்களிடம் இருந்து போதைப் பொருள் பழக்கத்தை கற்றுக் கொள்கின்றனா்.

எனவே, அந்த வகுப்பு மாணவா்களிடம் போதைப் பொருள்கள் பழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதேவேளையில் பள்ளி அருகில் உள்ள கடைகள், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் நபா்களையும் கண்காணித்து வருகிறோம். மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று போதைப் பொருள் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறாா்.

குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் இளம்பருவ மாணவா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா்கள், பேருந்து ஓட்டுநா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி உள்ளோம் என்றாா்.

சேலம், நெத்திமேட்டில் உள்ள ஜெயராணி அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் காவலா் மணிகண்டன் கூறியதாவது:

பள்ளி சிறுமிகள் மது குடிப்பது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. எனவே, பள்ளி சிறுமிகளிடம் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படுத்தும் இந்த விழிப்புணா்வை அவா்கள் தங்களின் பெற்றோா், உறவினா்கள் உள்ளிட்டோருக்கு அறிவுரை கூற உதவும். இதுபோன்ற பழக்கங்களுக்கு ஆளாகாமல் தடுக்க நேரிடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.