சேலம்: நியாய விலைக் கடையில் பிரதமரின் புகைப்படம் வைக்க முயன்ற பாஜகவினர் கைது
By DIN | Published On : 19th April 2022 01:25 PM | Last Updated : 19th April 2022 01:25 PM | அ+அ அ- |

சேலம்: சேலத்தில் நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க முயன்ற பாரதிய ஜனதா கட்சியினர் 23 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாநகர மாவட்ட பாஜக வர்த்தகப் பிரிவு சார்பில் செவ்வாய்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பேரில் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, வர்த்தகப் பிரிவு தலைவர் ஐ.சரவணன் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் நியாய விலைக் கடைக்குள் சென்று பிரதமர் மோடியின் போட்டோ வைக்க முயற்சித்தனர்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். அப்போது, பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியினர் நியாய விலைக் கடையில் உள்ள பலகையில், ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என எழுதி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். உடனே நியாய விலைக் கடை பணியாளர் பலகையில் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என எழுதி வைத்தார்.
இந்த நிலையில் நியாய விலைக் கடையின் மற்றொரு புறத்தில் திமுகவினர் திரண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து, பாஜகவினர் பிரதமரின் புகைப்படத்தை வைக்க அனுமதி தர வேண்டும். இல்லையெனில் வீடு, வீடாகச் சென்று நோட்டீஸ் வழங்க அனுமதி தரவேண்டும் என கேட்டனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததை அடுத்து பாஜகவினர் முழக்கமிட்டனர். இதற்கு திமுகவினரும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினரை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். கலைந்து செல்ல மறுத்ததால் 23 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறார். ரேஷன் கடைகளில் ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டம் வருகிற தீபாவளி பண்டிகை வரை உள்ளது.
இந்தத் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் தெரிந்துகொள்ள நியாய விலைக் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்க அனுமதி கேட்டோம். ஆனால் காவல்துறையினர் அனுமதி தரவில்லை என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...