தகுதி இல்லாதவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக நிர்வாகிகள் புகார்

தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு கழக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் கடந்த வாரம் சேலம் புறநகர் மற்றும்
தகுதி இல்லாதவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக நிர்வாகிகள் புகார்

சேலம்: தமிழகம் முழுவதும் அதிமுக அமைப்பு கழக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் கடந்த வாரம் சேலம் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் புறநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிட்டார். அவரை யாரும் எதிர்த்து போட்டியிடாதால் அவர் மாவட்ட செயலாளர் ஆவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது அதிமுகவினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

எடப்பாடி கே.பழனிசாமி எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் இளங்கோவனுக்கு இந்த பதவி வழங்கியது எப்படி என்பது குறித்து கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்தில்  உள்ள நிலையில் இளங்கோவனுக்கு புறநகர் மாவட்ட செயலாளர் பதவி வழங்கியதை ஏற்க மாட்டோம் என சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் வையாபுரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்

தாங்கள் அனைவரும் எடப்பாடி கே.பழனிசாமி தான் தேர்வு செய்ய முன் மொழிந்ததாகவும், அதனால் யாரும் அவரை எதிர்த்து போட்டியிடவில்லை என்றும், ஆனால் எதிர்பாராதவிதமாக இளங்கோவனுக்கு பதவி கொடுத்து இருப்பது எந்தவகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னைப்போல மற்றவர்களும் இதே மனநிலையில்தான் உள்ளனர் என்றும் அவர்கள் வெளியே கருத்து தெரிவிக்காமல் உள்ளது அதிமுகவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக என்று தெரிவித்தார்

கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்வதோடு சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டி காரியம் சாதிப்பது, ஒன்றிய செயலாளர்களை கட்சி நிர்வாகிகளுடன் சேர விடாமல் தடுப்பதும் இளங்கோவனின் வேலை என்றும் தெரிவித்துள்ளார். இளங்கோவனுக்கு கட்சியின் நல்ல பெயர் இல்லை என்றும் அதிமுக தொண்டர்களை மாற்று கட்சிக்கு அனுப்பி வருவதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்

மேலும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விசாரணை வளையத்திற்க்குள் கொண்டுவரப்பட்டுள்ள இளங்கோவனுக்கு பதவி வழங்கியது எந்த வகையில் நியாயம் என்றும், அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு இதுவரை இளங்கோவன் பதில் அளிக்காதது பல்வேறு  சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.  
அதிமுகவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தற்போது  கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவியை ஜீரணிக்க  முடியவில்லை என்றும் கட்சித் தலைமை இதனை மறு ஆய்வு செய்யாமல் இருந்தால் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி கே.பழனிசாமிக்கு சேலம் மாவட்டத்தில் கட்சிக்குள் எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது சேலம் ஒன்றிய செயலாளர் வையாபுரி எடப்பாடி கே.பழனிசாமி மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com