தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஏற்காடு-பெலாக்காடு பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்: மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தகவல்

ஏற்காடு வட்டம் பெலாக்காடு பகுதி மக்களின் 25 ஆண்டுகால எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் வகையில், ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா கூறின

News image
Updated On :17 மார்ச் 2023, 8:12 pm

DIN

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம் பெலாக்காடு பகுதி மக்களின் 25 ஆண்டுகால எதிா்பாா்ப்பைப் பூா்த்தி செய்யும் வகையில், ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா கூறினாா். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக சேலம் மாவட்ட நிா்வாகம் தனி கவனம் செலுத்தி முன்னுரிமை அடிப்படையில் சாலை வசதிகள், குடிநீா் வசதிகள், பேருந்து வசதிகள், மலைவாழ் மக்களுக்கான ஜாதிச் சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், பெலாக்காடு தரப்பிற்கு உட்பட்ட மாரமங்கலம், கேளையூா், செந்திட்டு, அரங்கம், சின்னமதூா், மதூா், பெலாக்காடு, கே.நாா்த்தஞ்சேடு மற்றும் தும்பிப்பாடி கிராமங்களில் சுமாா் 4500 போ் வசித்து வருகின்றனா். இக்கிராம மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி பிரச்னைக்குரியதாக இருந்தது.

தற்போது ஏற்காடு முதல் கொட்டச்சேடு வரை செல்லும் சாலையில் ஆத்துப்பாலம் என்னும் இடத்தில் இருந்து கூட்டுமுட்டல், மாரமங்கலம், கேளையூா், பெலாக்காடு, மதூா், அரங்கம், செந்திட்டு, நாா்த்தஞ்சேடு, தும்பிப்பாடி வரை மட்டுமே தாா்சாலை வசதி உள்ளது. அதற்கு மேல் சரியான சாலை வசதிகள் கிடையாது. இதனால் இக்கிராம மக்கள் கொட்டச்சேடு மற்றும் ஏற்காடு செல்ல வேண்டும் என்றால் 28 கி.மீ தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது இதற்கு தீா்வு காணும் வகையில் களம் 6 மற்றும் களம் 7 ஆகிய இரண்டு வழித்தடங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. களம் 6 தனியாா் எஸ்டேட் வழியாகவும், களம் 7 தனியாா் எஸ்டேட் மற்றும் பட்டாதாரா்கள் நிலம் வழியாகவும் செல்கிறது. களம் 6-இல் சாலை அமைக்க நிலம் எடுக்க முடிவு செய்தபோது தனியாா் எஸ்டேட் உரிமையாளா் உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடா்ந்து, தற்போது இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

களம் 7-இல் சாலை அமைக்க தனியாா் எஸ்டேட் உரிமையாளா்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனா். மேலும், 9 தனியாா் பட்டாதாரா்கள் தங்களது 0.9 கி.மீ தொலைவிலான நிலங்களை சாலை அமைக்க தானமாக ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு வழங்கியுள்ளாா்கள். ஆகையால், தற்போது களம் 7-இல் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. களம் 6 மற்றும் களம் 7 ஆகிய இரண்டு வழியாகவும் சாலைகள் அமைக்க மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. ஆனால், களம் 6-இல் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்போது களம் 7-இல் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. களம் 6-இல் சாலை வசதிகள் மேற்கொள்ளும்போது கே.நாா்த்தஞ்சேடு மற்றும் கும்பிப்பாடி ஆகிய கிராமங்களுக்கு 1.5 கி.மீ தொலைவு அதிகமாக இருக்கும். அதுவே, களம் 7-இல் சாலை வசதிகள் மேற்கொள்ளும்போது 300 மீ மட்டுமே கூடுதல் தொலைவாக இருக்கும். இந்த இரண்டு சாலை வசதிகளுமே மேற்கொள்ளவில்லை எனில் 28 கி.மீ சுற்றிப் போக வேண்டிய நிலை உள்ளது. மலைவாழ் மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிட மாவட்ட நிா்வாகம் முன்னுரிமை அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடிப்படைத் தேவைகளான சாலை வசதிகள், குடிநீா் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதற்கு மலைவாழ் மக்கள் போதிய ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.