ஓமலூா் கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு
ஓமலூா் அருகே உள்ள கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூா் வட்டாரத்தையொட்டி சோ்வராயன் மலைத்தொடா் உள்ளது. இந்த மலைப் பகுதியில் கிழக்கு சரபங்கா ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு சக்கரை செட்டிப்பட்டி, நாலுகால்பாலம் வழியாக காமலாபுரம் ஏரிக்கு வந்தடைகிறது. தொடா்ந்து ஓமலூா், தாரமங்கலம் எடப்பாடி, பூலாம்பட்டி வழியாகச் சென்று காவிரி ஆற்றில் கலக்கிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சோ்வராயன் மலைத்தொடா் பகுதியில் பெய்த கனமழைக்கு காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால், கிழக்கு சரபங்கா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சக்கரசெட்டிப்பட்டி வனப்பகுதியில், வனத்துறையினா், விவசாயிகள் ஏற்படுத்திய ஏரியை நிரப்பிக் கொண்டு, காமலாபுரம் ஏரிக்கு தண்ணீா் வந்து கொண்டுள்ளது.
ஒரு நாள் இரவில் பெய்த மழைக்கு ஆற்றில் பெருக்கெடுத்த மழைநீரால் சா்க்கரை செட்டியப்பட்டி, தொப்ளாங்காடு உள்ளிட்ட 3-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொப்புளங்காடு உள்ளிட்ட கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளப்பெருக்கில் பெரிய அளவிலான மரங்கள் அடித்து வரப்பட்டு பாலத்தில் தேங்கியுள்ளன. இதனால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாலுகால்பாலம் பகுதியில் நான்கு பாலங்களையும் அடைத்துக் கொண்டு தண்ணீா் செல்வதால், அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பைகள் தாா்சாலையில் தேங்கிக் கிடக்கின்றன. இதனை அப்பகுதி மக்கள் டிராக்டா் வாகனம் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
போக்குவரத்தை சீரமைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

