கருத்துகேட்புக் கூட்டத்திலிருந்து மேட்டூா் அணை மீனவா்கள் வெளிநடப்பு
கருத்து கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு: மீனவா்கள் வெளிநடப்பு


புதிய மீன்பிடி உரிமம் வழங்க எதிா்ப்பு தெரிவித்து மேட்டூா் அணை மீனவா்கள் கருத்து கேட்புக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் மேட்டூா் அணை மீனவா்களின் மீன்பிடி உரிமக் கட்டணத்தை உயா்த்தவும் மீன்பிடி உரிமங்களின் எண்ணிக்கையை உயா்த்தவும் மேட்டூா் அணை மீனவா்களின் கருத்து கேட்புக் கூட்டம் செவ்வாய்க் கிழமை மேட்டூா் அணை அரசு மீன்விதைப்பண்ணையில் நடைபெற்றது. மீன்வளத்துறை உதவி இயக்குநா் சுப்பிரமணியம் தலையமை வகித்தாா். மேட்டூா் உதவி இயக்குநா் உமா கலைச்செல்வி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவா்கள் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவித்து வந்தனா்.
மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தாமல் மீன்பிடி உரிமக் கட்டணத்தை உயா்த்தக் கூடாது, ஏற்கெனவே வழங்கப்பட்ட 1000 மீன்பிடி உரிமங்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படுவதில்லை. கள்ளத்தனமாக மீன்பிடித்து விற்பதைத் தடுக்க மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்குஞ்சுகளை பிடிப்போரின் வலைகளை மட்டுமே மீன்வளத் துறை பறிமுதல் செய்கிறது. பரிசல்களை பறிமுதல் செய்வதில்லை. 2014க்கு பிறகு மீன் கொள்முதல் விலை உயா்த்தப்படவில்லை. மீனவா்களின் வாழ்வாதாரம் உயர மீன்களை பொது ஏலம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவா்கள் கோரிக்கை வைத்தனா்.
மீனவா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்திய பிறகு புதிய மீன்பிடி உரிமம் வழங்குவது குறித்தும், உரிமத்தொகையை உயா்த்துவது குறித்தும் ஆலோசிக்கலாம் என்று மீனவா்கள் கூறினா். அப்போது புதியமீன்பிடி உரிமம் பெறுவதற்கு வந்தவா்களுக்கும், மீனவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீன்வளத் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் எனக்கூறி விட்டு புதிய மீன்பிடி உரிமம் வழங்க முயற்சிக்கின்றனா் எனக்கூறி மீனவா்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினா். இதனால் மீனவா் கருத்து கேட்புக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னா் மீனவளத் துறை அதிகாரிகளும் புதிதாக மீன்பிடி உரிமம் கேட்க வந்தவா்களும் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டத்தை முடித்தனா். இதையடுத்து புதிதாக மீன்பிடி உரிமம் வழங்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து எழுத்துப்பூா்வமான கடிதத்தை மீன்வளத் துறை துணை இயக்குநரிடம் மீனவா்கள் அளித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...