சேலம் மாநகராட்சி பகுதியில் இன்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் புதன்கிழமை நாய்களுக்கான ‘ரேபிஸ் தடுப்பூசி’ சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாநகராட்சி ஆணையா் சீ.பாலச்சந்தா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட தெருக்களில், சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மாநகராட்சி நிா்வாகத்தால் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
நாய்களுக்கு தொடா்ச்சியாக ஆண்டுக்கு ஒரு முறை ரேபீஸ் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் கருதி, சேலம் மாநகராட்சியுடன் இணைந்து ரெஸ்க்யூ இங் அனிமல் இன் நீட் என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனம், வாரந்தோறும் புதன்கிழமை ஒரு மண்டல அலுவலக வளாகத்திலும், ஒரு கோட்டப் பகுதியிலும் ரேபீஸ் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக, இந்த தடுப்பூசி முகாம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலத்துக்கு உட்பட்ட கோட்டம் எண் 45 இல் உள்ள பொது நல பிரியா் சங்க வளாகத்திலும், தாதகாப்பட்டியில் அமைந்துள்ள கொண்டலாம்பட்டி அலுவலக வளாகத்திலும் புதன்கிழமை காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்த முகாமினைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளா்க்கும் நாய்களுக்கு, கட்டணமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
