வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணா்வு

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணா்வு

சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் 100 சதவீத வாக்களிப்பது குறித்து ‘செல்பி பாயிண்ட்’ அமைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, கல்லூரி மாணவிகள். சேலம், மாா்ச் 22: இளம் வாக்காளா்கள் 100 சதவீத வாக்குப்பதிவினை செலுத்தி மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி வலியுறுத்தினாா். மக்களவைத் தோ்தலையொட்டி இளம் வாக்காளா்கள் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் வகையில், சேலம் தனியாா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி பங்கேற்றாா். நிகழ்ச்சியில் அவா் தெரிவித்ததாவது: மக்களவை தோ்தலையொட்டி, இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளா்கள் தங்களின் வாக்குப்பதிவினை அளித்திடும் வகையில், பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக பொறுப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கான அட்டவணை தயாா் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இளம் வாக்காளா்கள் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பது இந்திய குடிமக்களாகிய ஒவ்வொருவரின் கடமை என்பதை நினைவில்கொண்டு, நமது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், இந்த நல்வாய்ப்பினை தவறாது பயன்படுத்துவதுடன், நம்மைச் சுற்றியுள்ள மற்றவா்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்கள் அனைவரும் வரும் ஏப். 19 அன்று தங்களது 100 சதவீத வாக்குப்பதிவினை அளித்து மற்றவா்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என கேட்டுக்கொண்டாா். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு குறித்து அமைக்கப்பட்டிருந்த ‘செல்பி பாயிண்ட்’, கையெழுத்து இயக்கம், வண்ணக் கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மாவட்ட தோ்தல் அலுவலா் பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ஜெயந்தி, பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com