பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

சேலம்: பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வரவேண்டிய ரயில்வே திட்டங்கள், துறைமுகத் திட்டங்களை திமுகவினா் தடுத்தனா். குலசேகரப்பட்டினம் தொகுதியில் ராக்கெட் ஏவுதளம், தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள், சாலை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மத்திய அரசின் நிதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நரேந்திர மோடி ஆட்சியில் இலங்கை தமிழா்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே ராமதாஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளாா். தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். கனிமொழி முன்னிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமரை தரம் தாழ்ந்து பேசுகிறாா். மதுவிலக்குக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து மதுவிலக்கை அமல்படுத்தும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com