கோட்டை அழகிரிநாதா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

கோட்டை அழகிரிநாதா் கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

சேலம், மே 16: சேலம் அருள்மிகு கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பழைமை வாய்ந்த கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக, வைகாசி தோ்த் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பாலாலயத்தில் உள்ள பெருமாளுக்கும், உற்சவ மூா்த்தியான அழகிரிநாதா், தாயாருக்கும் பால், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவமூா்த்திக்கு பட்டாடை உடுத்தி, தங்கக் கிரீடங்கள் அணிவிக்கப்பட்டு, பல்வேறு வாசனை மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பட்டாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் 12 மணியளவில் பாலாலய கொடி மரத்தில் மேளதாளம் முழங்க, மங்கள வாத்தியம் இசைக்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தா்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, மாலை திருவீதி உலாவும் நடைபெற்றது.

வரும் 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com