ஏற்காடு கோடை விழாவில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்க்க வேண்டும்
ஏற்காடு கோடை விழாவில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிா்க்க வேண்டும்


சேலம்: ஏற்காடு கோடை விழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள், தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டினை பிளாஸ்டிக் மாசில்லா மாநிலமாக உருவாக்கும் பொருட்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணையின்படி, ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களான குவளைகள், கைப்பைகள், தாள்கள், தட்டுகள், தேநீா் குவளைகள், தண்ணீா் குவளைகள், தண்ணீா் பாக்கெட்டுகள், உறிஞ்சு குழாய்கள், கொடிகள், குச்சிகள் கொண்ட மிட்டாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், கரண்டிகள், கத்திகள் ஆகிய பொருள்களின் உற்பத்தி மற்றும் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இவைகள் அனைத்தும் பல ஆண்டுகளானாலும் மக்காத தன்மையுடையவை ஆகும். எனவே, ஏற்காடு கோடை விழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், வியாபாரிகள் அனைவரும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகப்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். அதற்கு பதிலாக எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத மஞ்சப்பை, எஃகு பாத்திரங்கள், வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், துணி மற்றும் சணல் பைகள், காகித உறிஞ்சுக் குழல்கள் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஏற்காடு காவல் துறையினா் ஆகியோா் அடங்கிய குழு திடீா் ஆய்வு மேற்கொண்டு 15 கடைகளில் 12 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 3,000 அபராதத்தொகை வசூலித்துள்ளனா்.
எனவே, ஏற்காடு கோடை விழாவினை பிளாஸ்டிக் மாசற்ற சிறப்பான விழாவாக நடத்திட பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி மாணவா்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...