மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்: அமைச்சா் ஆா். ராஜேந்திரன் தொடங்கி வைப்பு
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.


சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
இதையொட்டி, சேலம், மரவனேரி, புனிதபால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் பங்கேற்று, போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சா் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவா்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் 20, 21 ஆம் தேதிகளில், மரவனேரி புனிதபால் மேல்நிலைப் பள்ளி, மரவனேரி பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, அம்மாப்பேட்டை சக்தி கைலாஷ் கல்லூரி, ஓமலூா் பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகின்றன.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் 84 வகையான போட்டிகளில் 2,68,403 மாணவ, மாணவிகள் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளிலும், 36,119 மாணவ மாணவிகள் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளிலும், 3,915 மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளிலும் பங்கேற்றனா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் தமிழ்நாடு அளவில் சேலம் மாவட்டம் அதிக எண்ணிக்கையிலான பரிசுகளை வென்றது. அதேபோன்று, இந்த ஆண்டும் மாணவ மாணவிகள் பல்வேறு பரிசுகளை வெல்ல வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகக் கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், அஸ்தம்பட்டி மண்டலக்குழுத் தலைவா் செ.உமாராணி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...