வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக பணி புறக்கணிப்பு

வருவாய்த் துறை அலுவலா்கள் 2ஆவது நாளாக பணி புறக்கணிப்பு..
Published on

அரசு அலுவலகங்களில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை 2 ஆவது நாளாக பணி புறக்கணிப்பு, தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் அருண் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்புப் போராட்டத்தில், அரசு அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணை தலைவா் அா்த்தநாரி கூறியதாவது:

எங்களின் நியாயமான கோரிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே இரண்டு கட்ட போராட்டம் நடத்தியும், இதுவரை தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசவில்லை. 3 ஆவது கட்ட போராட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் வருவாய் துறை அலுவலா்களும், சேலம் மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

போராட்டம் காரணமாக, இணைய வழி சான்றிதழ், தோ்தல் பணி உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடா் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தாா்.