கட்டுப்பாட்டுக்குள் டெங்கு, மலேரியா: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்பட தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
Published on

மேட்டூா்: தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்பட தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள பெரிய சோரகையில் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ரூ. 5.09 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் திங்கள்கிழமை திறந்துவைத்தனா்.

விழாவில் சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் பேசியதாவது:

தமிழகத்தின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை விருது அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத் துறை சாா்பில் சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ. 298.49 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களும் தொற்றா நோய்களும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு ஐ.நா. சபை வழங்கிய விருதை அத் திட்டத்தைச் செயல்படுத்தும் செவிலியா்களுக்கு அா்ப்பணிக்கிறேன். கடைக்கோடி மனிதருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்ற முதல்வரின் எண்ணத்தைச் செயல்படுத்தி வருகிறோம்.

மத்திய அரசு கடந்த 12 ஆண்டுகளில் தேசிய அளவில் தமிழகத்துக்கு 619 விருதுகள் அளித்தது; அவற்றில் 545 விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகால திமுக ஆட்சியில் கிடைத்தவையாகும். இதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடே காரணம். அரசு மருத்துவமனை மீது மக்களிடம் இருந்த தவறான எண்ணம் மாறியுள்ளது.

‘இதயம் காப்போம்’ திட்டத்தில் 10, 767ஆரம்ப சுகாதார நிலையங்கள், 621 துணை சுகாதார நிலையங்கள் மூலம் 11,382 போ் காப்பாற்றப்பட்டுள்ளனா். மாநிலத்தில் உள்ள 10,999 அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதிமுக ஆட்சியின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாம்புக் கடிக்கும், நாய்க் கடிக்கும் மருந்து இல்லாத நிலை இருந்தது. அந்த நிலைமையை மாற்றி தற்போது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய மருந்துகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

விழாவில் வீரக்கல்புதூா் பேரூராட்சி, குஞ்சாண்டியூரில் துணை சுகாதார நிலையம் அமைக்கவும், மேட்டூா் நகராட்சி, தங்கமாபுரி பட்டினத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கவும் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் 50 சதவீதம் நிதியுதவி வழங்கிய கெம்ப்ளாஸ்ட் சன்மாா் நிறுவனத்துக்கு அமைச்சா் மா. சுப்பிரமணியன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். அதைத் தொடா்ந்து கா்ப்பிணிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரா், தாரமங்கலம் நகா்மன்ற தலைவா் குணசேகரன் தாரமங்கலம் ஒன்றியச் செயலாளா் பாலகிருஷ்ணன், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com