26,274 மாணவா்களுக்கு ரூ. 12.43 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
சேலம்: சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன், விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசியதாவது:
தமிழ்நாட்டில் மற்ற அனைத்து துறைகளைக் காட்டிலும் பள்ளிக் கல்வித் துறைக்கென கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அதேபோன்று, அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 2 கோடி போ் பயனடைந்து வருகின்றனா்.
மேலும், புதுமைப்பெண் திட்டம் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் மூலம் மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 36,000 என்ற வகையிலும், ஐந்து ஆண்டுகள் படித்தால் ரூ. 60,000 என்ற வகையிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும், மாணவ, மாணவியா் எளிதாகவும், விரைவாகவும் பள்ளிக்கு சென்றுவர விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் 11,726 மாணவா்களுக்கும். 14,548 மாணவிகளுக்கும் என மொத்தம் 26,274 மாணாக்கா்களுக்கு ரூ. 12.43 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் வகையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்களை அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் நல்லமுறையில் பயன்படுத்தி உங்கள் வாழ்வில் சிறந்த நிலையை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி. சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் கோட்டாட்சியா் அபிநயா, பனமரத்துப்பட்டி பேரூராட்சித் தலைவா் கே.வி.பரமேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவ, மாணவிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

