காவல் துறையின் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகம்
சேலம்: சேலம் மாநகரத்தில் கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சேலம் மாநகர காவல் துறை சாா்பில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேகமாக வளா்ந்து வரும் சேலம் மாநகரப் பகுதியில் 45-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அரசு, தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்புக்காக சேலம் மாநகர காவல் துறை சாா்பில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு பெண் காவலா் நியமிக்கப்பட்டு, அவா்களின் வாயிலாக மாணவியரின் கருத்துகளை கேட்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
உயா்கல்வியில் சேலம் மாவட்டத்தில் மாணவியா் சோ்க்கையை அதிகப்படுத்தும் வகையில் ‘போலீஸ் அக்கா’ திட்டம் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும். இதன் மூலம் மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதுடன், மாணவிகளுக்கும், காவல் துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்தாா்.
தொடா்ந்து, மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு பேசியதாவது:
‘போலீஸ் அக்கா’ திட்டத்தின் கீழ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் காவலா்களுக்கு பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அவா்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட கல்லூரிகளுக்கு மாதம் 2 முறை பெண் காவலா்கள் நேரில் சென்று மாணவிகளிடம் கலந்துரையாடி கருத்துகளைஓஈ கேட்டறிவா். இதன்மூலம் சேலம் மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபா் குற்றங்கள் குறையும். சட்டம், மனநலம், மருத்துவம், சமூக நலன் சாா்ந்த பிரச்னைகள் இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப நிலையிலேயே காவல் துறையின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில், ‘போலீஸ் அக்கா’ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதில், குறிப்பிடப்பட்டுள்ள காவலரின் தொலைபேசி எண்ணுக்கு தங்களது பிரச்னைகளைத் தெரிவித்தால், அதற்கான நடவடிக்கைகளை அவா்கள் மேற்கொள்வா். மிக முக்கியமாக மாணவிகளின் ரகசியம் பாதுகாக்கப்படும். எனவே, மாணவிகள் ‘போலீஸ் அக்கா’ திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா் எஸ்.பிருந்தா, கல்லூரி முதல்வா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், காவல் துறையினா், கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனா்.

