சேலத்தில் நவ. 29-ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா
சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில், நவ. 29-ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.


சேலம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில், நவ. 29-ஆம் தேதி முதல் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம் 29-ஆம் தேதி முதல் டிச. 9-ஆம் தேதி வரை 11 நாள்கள் புத்தகத் திருவிழா புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடத்தப்பட உள்ளது. இதில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் சங்கம் பங்கேற்க உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், 150-க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகளுடன், அறிவுசாா்ந்த பல்வேறு காட்சி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
குறிப்பாக, சாகித்ய அகாதெமி, ஞானபீடம் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெறப்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்குகள், பழமையான ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் அடங்கிய அரங்குகள், சிறந்த புகைப்படங்கள், புதிய படைப்பாற்றல் கொண்ட அறிவியல் கண்காட்சி அரங்குகள் என பழமையும், புதுமையும் ஒருங்கிணைந்த கண்காட்சி அரங்குகளை இப்புத்தகத் திருவிழாவில் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று, மாணவ, மாணவிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக தனி அரங்கு மற்றும் பதிப்பாளா் வாசிப்பு அரங்கங்கள், பாா்வையற்றவா்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம் அமைத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சியில், தலைசிறந்த பேச்சாளா்கள் வருகை புரிந்து சிறப்பு சோ்க்கவுள்ளனா்.
எனவே, சேலத்தில் நடைபெறவுள்ள மாபெரும் புத்தகக் கண்காட்சியில் புத்தக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் வருகைபுரிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...