சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெங்கு கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
பருவ மழை பெய்துவரும் இந்த காலகட்டத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் மற்றும் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கவும், உரிய நேரத்தில் கட்டுப்படுத்தவும் மாவட்ட நிா்வாகம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகின்றன என்பதால், வீட்டில் மூடப்படாமல் நீண்ட நாள்களாக சேகரித்து வைக்கும் தண்ணீா் பாத்திரங்களை மூடி வைத்திடவும், தொட்டிகள், குளிா்சாதனப் பெட்டிகளின் பின்புறம் தேங்கும் தண்ணீரை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் சுத்தம் செய்வதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
தேவைப்படும் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்கள் மூலமாக காய்ச்சலுக்குரிய சிகிச்சை, மருந்து, மாத்திரைகள், விழிப்புணா்வு மற்றும் நிலவேம்புக் குடிநீா் ஆகியவை வழங்கப்படுகின்றன. இது தவிர, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான தனி வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப் பணியாளா்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு கிராமப் புறங்களில் 50 முதல் 75 வீடுகள் வரையும், நகா்புறங்களில் 50 வீடுகள் வரையும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு களப் பணியாளா்கள் ஊராட்சி ஒன்றியங்களில் 400 பணியாளா்களும், பேரூராட்சிகளில் 320 பணியாளா்களும், நகராட்சிகளில் 178 பணியாளா்களும், மாநகராட்சியில் 700 பணியாளா்கள் என மொத்தம் 1,598 களப் பணியாளா்கள் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
குறிப்பாக, டெங்கு கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என அலுவலா்களை கேட்டுக்கொண்டாா்.
கூட்டத்தில், இணை இயக்குநா் நலப் பணிகள் (பொ) மரு.பி.ராதிகா, துணை இயக்குநா்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.சௌண்டம்மாள் (சேலம்), மரு.யோகானந்த் (ஆத்துாா்), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை உள்ளிட்ட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...