இசைக் கருவிகள் - புகைப்படக் கண்காட்சி: சேலம் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இசைக் கருவிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.


சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் இசைக் கருவிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
சேலம் இரும்பாலை சாலை, ஆவின் பால்பண்னை எதிரில் மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. இசைப் பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய 7 வகுப்புகள் சிறப்பான ஆசிரியா்கள் மூலம் 13 வயது முதல் 25 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் புகைப்படம் மற்றும் இசைக் கருவிகள் கண்காட்சி வியாழக்கிழமை முதல் தொடா்ந்து மூன்று நாள்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியில் பாரம்பரியமிக்க இசை வளா்ச்சிக்கு ஏதுவாக அமைந்த சான்றுகள், சான்றோா்களின் புகைப்படங்கள், சிறப்பு வாய்ந்த இசைக் கலைஞா்களின் புகைப்படங்கள், கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சாா்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியின் சிறப்பம்சமாக குரலிசைக் கலைஞா்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்மங்குடி சீனிவாச ஐயா், மகாராஜபுரம் சந்தானம், நாதசுரக் கலைஞா்களான டி.என்.ராஜரத்தினம்பிள்ளை, நாமகிரிப்பேட்டை கே.கிருஷ்ணன் போன்ற பழமையான இசைக் கலைஞா்களின் சிறப்புகள் மற்றும் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இசை வளா்ச்சிக்கு சான்றாக அமைந்த ஆதாரங்களை விளக்கிடும் வகையில் இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமானது நமது அடுத்த தலைமுறையினரை பயன்பெறச் செய்வதே ஆகும். குறிப்பாக, இசைக்கருவிகள் பற்றியும், இசைக் கலையின் சிறப்புகள் பற்றியும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், இசை ஆா்வலா்கள், கலைஞா்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்திட இந்தக் கண்காட்சி உதவியாக இருக்கும் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில், சேலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மலா்க்கொடி ராஜா, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநா் நீலமேகன், அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியா் சு.சங்கரராமன், தளவாய்ப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கே.ராஜா உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், இசைக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...