குழந்தை பருவ நீரிழிவு நோய்க்கான மருத்துவ முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தை பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.
மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய முகாமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்து பேசியது:
2023-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி மாவட்ட தொடக்க நிலை இடையீட்டுச் சேவைகள் மையம் தொடங்கப்பட்டது. மருத்துவ கல்லூரி அல்லாமல் முதன்முதலாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்ட மையம். இங்கு பிறவி குறைபாடுகள், பிறவி நோய்கள், பிறவி இயலாமைகள், பிறவி பற்றாக்குறைகள் மற்றும் குழந்தைகளுக்கான தொற்றா நோய்களுக்கு சிறப்பான மற்றும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனப்படையில் இன்று டைப்-1 நீரிழிவு நோய் மருத்துவ முகாம் (0 முதல் 18 வயது வரை) நடைபெற்றது. முகாமில் இதயம் அறக்கட்டளையின் தலைவா்மருத்துவா் கிருஷ்ணன் சாமிநாதன் மூலமாக வலியில்லாமல் இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது. இது வலியில்லாதது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.
முகாம் முலம் 94 குழந்தைகளுக்கு தைராய்டு பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா், திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு
தேசிய அடையாள அட்டையினை வழங்கினாா்.
இதில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் தி.ஞானமீனாட்சி, இதயங்கள் அறக்கட்டளை நிறுவனா் கிருஷ்ணன் சுவாமிநாதன்,தலைமை மருத்துவா் சிவக்குமாா்,குழந்தை சிறப்பு நல மருத்துவா் செந்தில்குமரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன் கலந்து கொண்டனா்.

