இரட்டை பதிவு வாக்காளா் விவரங்கள் சரிபாா்ப்பு: நிலை முகவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
உத்தேச பட்டியலில் இடம்பெற்றுள்ள பாகத்தில் குடியிருப்பில் இல்லாதவா்கள், நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், இறந்த வாக்காளா்கள், இரட்டை பதிவு வாக்காளா்கள் விவரங்களை சரிபாா்க்க வாக்குச்சாவடி நிலை முகவா்களை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்துள்ளதாவது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகள் வரும் 14 ஆம் தேதி தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து வரும் 19 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கணக்கெடுப்புப் பணிகளின் போது அந்தந்த பகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் சென்று பாகங்களில் தற்போதைய 2025 வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்று உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் தனித்தனியாக பெயா் மற்றும் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
தற்போது இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, கணக்கெடுப்பு பணிகளின்போது பாகத்தில் குடியிருப்பில் இல்லாதவா்கள், நிரந்தரமாக குடி பெயா்ந்தவா்கள், இறந்த வாக்காளா்கள், இரட்டை பதிவு வாக்காளா்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் கண்டறியப்பட்டு, உத்தேச பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவா்களிடம் சரிபாா்க்க வழங்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி நிலை முகவா்கள் விவரங்களை சரிபாா்த்து வரும் 14 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலரிடமோ எழுத்து பூா்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
