24 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் 35,725 பேருக்கு மருத்துவ உதவி: ஆட்சியா்!
சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 24 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 35,725 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்தாா்.
வாழப்பாடியை அடுத்த திருமனூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் சேலம் மணக்காடு காமராஜா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல்முறையாக நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 24 மருத்துவ முகாம்களில் 15,014 ஆண்கள், 20,711 பெண்கள் உள்பட மொத்தம் 35,725 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.
ஆய்வின்போது ஆத்தூா் மாவட்ட சுகாதார அலுவலா் யோகானந்த், வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம், வாழப்பாடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி தொகுதி மக்களவை உறுப்பினா் மலையரசன் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு ஆய்வு செய்தாா். மருத்துவ முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் இலவச மருத்துவப் பரிசோதனை, ஆலோசனைகளை பெற்றனா்.
