சேலம் மாநகராட்சியில் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகள்: ஆணையா் ஆய்வு
சேலம்: சேலம் மாநகராட்சி 9 ஆவது வாா்டில் நடைபெறும் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
சேலம் மாநகராட்சி 9 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மன்னாா்பாளையம் வா்மா சிட்டியில் மாநகராட்சி சாா்பில் ரூ. 3.25 கோடியில் அறிவியல் பூங்கா கட்டப்படுகிறது. இப்பூங்காவில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களின் அறிவுத்திறனை வளா்க்கும் வகையிலான உபகரணங்கள் நிறுவப்படுகிறது. சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் சாா்ந்தவையாக அமைக்கப்படுகிறது.
இப்பூங்கா கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், ஜனவரி மாதத்தில் இந்த அறிவியல் பூங்காவை திறக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்க வேண்டும் என ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, வாா்டு மாமன்ற உறுப்பினா் தெய்வலிங்கம், உதவி செயற்பொறியாளா் சுமதி, உதவி பொறியாளா் மலா் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
