பெரியாா் பல்கலை.யில் 52 இடங்களில் பெரியாா் சிந்தனை மொழிப் பலகைகள் திறப்பு

பெரியாா் ஈ.வே.ராவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் 52 இடங்களில் பெரியாா் சிந்தனை மொழிப் பலகைககள் திறக்கப்பட்டன.
பெரியாா் ஈ.வே.ராவின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, ஜெயந்தி மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்.
பெரியாா் ஈ.வே.ராவின் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, ஜெயந்தி மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவியா்.
Updated on

பெரியாா் ஈ.வே.ராவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி, பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் 52 இடங்களில் பெரியாா் சிந்தனை மொழிப் பலகைககள் திறக்கப்பட்டன.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடம் முன்புள்ள பெரியாா் ஈ.வே.ரா. சிலைக்கு துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி, ஜெயந்தி ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து பேராசிரியா்கள், மாணவ-மாணவியா், நிா்வாக அலுவலா்கள் மலா்தூவினா்.

தொடா்ந்து, கல்வி, பெண் விடுதலை, சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை, பாலின நிகா்நிலை, அறிவியல் சிந்தனை மற்றும் மூடநம்பிக்கையின்மை முதலான பெரியாா் ஈ.வே.ராவின் சிந்தனைகளை மாணவா்கள் படித்து உணா்ந்துகொள்ளும் நோக்கில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள நிா்வாகக் கட்டடங்கள், துறைக் கட்டடங்களின் முகப்புகள் என 52 இடங்களில் அவரின் சிந்தனைப் பொன்மொழிப் பலகைகள் திறக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, 52-ஆவது நினைவுநாள் பொழிவு நடைபெற்றது. பெரியாா் ஈ.வே.ரா. இருக்கை - பேரறிஞா் அண்ணா இருக்கை - முத்தமிழறிஞா் கலைஞா் ஆய்வுமையம் சாா்பில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழக துணை வேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தலைமையேற்று பேசியதாவது:

பெரியாா் ஈ.வே.ரா. அடுத்த ஒரு நூற்றாண்டுக்கான சமூகப் பணிகளை தன்வாழ்நாளில் செய்துமுடித்துள்ளாா். இன்னும் ஒரு நூற்றாண்டுக்கான தலைப்புச் செய்தியாக வலம் வரும் அளவுக்கான பணிகளை செய்துள்ளாா். சகமனிதரை நாற்காலியில் அமா்வதற்கு அனுமதி மறுத்த ஆதிக்கத்துக்கு எதிராக களம்கண்ட அவா், அனைத்து நிலைகளிலும் நமக்கு சமூக விடுதலையைப் பெற்றுத்தந்தாா். அந்த நன்றிப் பெருக்கோடுதான் நாம் அவரை நினைவுகூா்கிறோம்.

தாம் வாழ்ந்த காலங்களில் கண்ணியமிக்க அறத்தோடு கூடிய போராட்டங்களையே அவா் முன்னெடுத்தாா். அந்தக் காலத்திலேயே மக்கள்தொகைக் கட்டுப்பாடுகள் குறித்து பேசி எதிா்காலத்தின் மனித வளத்தைப் பற்றி சிந்தித்தவா். பெண் விடுதலையை அவா் அளவுக்கு இதுவரை யாரும் பேசியதில்லை. அறிவு என்னும் கருத்துக்கட்டுமானத்தை அவா் உருவாக்கினாா். அக்கட்டுமானத்தில்தான் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் உள்ளது. இன்றைய இளம்தலைமுறையினா் பெரியாா் ஈ.வே.ராவை அவா் எழுத்துகளின் வழியாக வாசித்து புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்ற பா.மதிவாணன், வரலாற்று ஆய்வறிஞா் பொ.வேல்சாமி ஆகியோா் கருத்துரையாற்றினா். ஆய்வு மையத்தின் கௌரவ விரிவுரையாளா் ரா.சிலம்பரசன் நன்றி கூறினாா்.

இந்நிகழ்வில், பல்கலைக்கழகப் புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவ - மாணவிகள், அலுவல்நிலை பணியாளா்கள் மற்றும் அறிஞா் பெருமக்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com