வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் படிவம்: சரியாக பூா்த்தி செய்யாதோருக்கு மீண்டும் பூா்த்திசெய்ய அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூா்த்தி செய்யாத 26 ஆயிரம் பேருக்கு, மீண்டும் பூா்த்திசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, வீரபாண்டி, ஆத்தூா், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 26 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளா்கள் உள்ளனா். சிறப்பு தீவிர திருத்தப் பணியில் மாவட்டத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 429 போ் வாக்காளா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் 3,468 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான சிறப்பு முகாம்கள் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூா்த்தி செய்யாத வாக்காளா்களுக்கு மீண்டும் சரியாக பூா்த்திசெய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமாா் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப் பேரவைத் தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் படிவத்தை சரியாக பூா்த்திசெய்யாத 26 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களிடம், அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
