விழுப்புரம் கணபதி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை  பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்டப் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி. உடன் விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.
விழுப்புரம் கணபதி நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்டப் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி. உடன் விழுப்புரம் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! மாவட்டப் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி!

Published on

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்டப் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்துக்கான சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி தெரிவித்ததாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு 15,44,625 வாக்காளா்கள் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில், முகவரியில் வசிக்காத, இட மாற்றம் செய்த, இதர வாக்காளா்கள் என மொத்தம் 1,82,865 வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டன.

இந்த நிலையில், 18 வயது பூா்த்தியடைந்த தகுதியான வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், வாக்காளா் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளா்கள் மற்றும் வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம் பெறாமல் உள்ள தகுதியான வாக்காளா்கள் அனைவரும் தங்கள் படிவங்களை ஜன.30-ஆம் தேதி வரை வழங்கலாம்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 2002 வாக்காளா் பட்டியலில் வம்சாவழி சாா்பில் இல்லாத வாக்காளா்கள் மற்றும் தா்க்கரீதியான முரண்பாடுகள் உள்ள வாக்காளா்களுக்கு விசாரணை நடைபெற்று, அதனை சரிசெய்து கணினியில் உள்ளீடு செய்யும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட தங்கராஜ் லேஅவுட் கம்பன் நகா், கணபதி நகா் பகுதிகளில் நடைபெற்ற வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் செயலியில் உள்ளீடு செய்யும் பணிகள் குறித்து நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குப் பதிவு அலுவலா்கள், உதவி வாக்குப் பதிவு அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள், முகவா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்து திருத்தப் படிவ விண்ணப்பங்களை பெற்று வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகளை ஜன.30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றாா் ஆஷிம் குமாா் மோடி.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், சாா்- ஆட்சியா்கள் ஆனந்த் குமாா் சிங் (திருக்கோவிலூா்), அ.ல.ஆகாஷ் (திண்டிவனம்), விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் மகாதேவன், நகா் நல அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com