சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக திருச்சி மாவட்டம், துறையூருக்கு இயக்கப்படும் கும்பகோணம் கோட்ட புகரப் பேருந்துகள், வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு வராமல் புறவழிச்சாலையில் செல்வதால், கிராமப்புற மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், அனைத்து பேருந்துகளும், சேலம் - சென்னை புறவழிச்சாலையில் இருந்து இணைப்புச் சாலை வழியாக வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.
ஆனால், திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து தம்மம்பட்டி, வாழப்பாடி வழியாக சேலத்துக்கு இயக்கப்படும் கும்பகோணம் கோட்ட புகரப் பேருந்துகள் மாலை நேரத்தில் சேலத்தில் இருந்து துறையூருக்கு செல்லும்போது வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு வராமல், சேலம் - சென்னை புறவழிச்சாலையில் இருந்து வாழப்பாடி புதுப்பாளையம் இணைப்புச் சாலை வழியாக தம்மம்பட்டி சாலையில் துறையூருக்கு செல்கின்றன.
பேருந்து நிலையத்துக்கு வராமல் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதால், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும், சிங்கிபுரம், சோமம்பட்டி, வண்ணாத்திக்குட்டை மற்றும் நாமக்கல் மாவட்டம் திம்மநாயக்கன்பட்டி, மல்லியகரை, கோபாலபுரம் வழித்தடத்திலுள்ள கிராமப்புற மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியா் குறித்த நேரத்துக்கு பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சேலத்தில் இருந்து வாழப்பாடி வழியாக துறையூா் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு புகரப் பேருந்துகளையும் வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல போக்குவரத்துத் துறை மற்றும் கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் பயணிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.